டாடா திரைவிமர்சனம் : டாடா பாசமிகு நேசமிகு சிங்கிள் டாடிக்களுக்கு சமர்ப்பணம் | ரேட்டிங்: 4/5

0
551

டாடா திரைவிமர்சனம் : டாடா பாசமிகு நேசமிகு சிங்கிள் டாடிக்களுக்கு சமர்ப்பணம் | ரேட்டிங்: 4/5

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்து, அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதி இயக்கிய படம் டாடா.
படத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ்,ஐஸ்வர்யா, விடிவி கணேஷ், மோனிகா சின்னகோட்லா,ஹரிஷ் குமார் என பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை-ஜென் மார்ட்டின், ஒளிப்பதிவு – எழில் அரசு , படத்தொகுப்பு- கதிரேஷ் அழகேசன், மக்கள் தொடர்பு- சுரேஷ் சந்திரா டிஒன்.

கல்லூரியில் படிக்கும் மணிகண்டன்(கவின்) பொறுப்பில்லாமல் கவலையில்லாமல் தன் இஷ்டப்படி வாழ்பவன். தன் சக தோழி சிந்துவை காதலிக்க எதிர்பாராத விதமாக சிந்து கர்ப்பமாகிறார். சம்பாதிக்காத நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று மணி வற்பறுத்த, சிந்துவோ இதற்கு உடன்படாமல் மணியை சம்மதிக்க வைத்து தனியாக வீடு எடுத்து வாழ்கிறார்கள். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் மணி பிரசவ செலவிற்காக கடுமையாக உழைக்க ஆரம்பிக்கிறார். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்க, சிந்து கண்டிக்கிறார். இது தொடர்கதையாக இருவரும் சண்டை போட, கோபத்தில் மணி சிந்துவை செத்துப்போ என்று திட்டிவிட்டு செல்ல, அதே நேரத்தில் பிரசவ வலி ஏற்படுகிறது. மணியை தொடர்பு கொள்ள முயன்றும், முடியாமல் போக தன் பெற்றோரை அழைத்து மருத்துவமனைக்கு செல்கிறார் சிந்து. வேலை முடிந்து திரும்பி வரும் மணி, சிந்துவை தேடி மருத்துவமனைக்கு செல்ல, அங்கே குழந்தை மட்டுமே அறையில் இருக்க, சிந்து பெற்றோருடன் சென்று விட்டதை அறிந்து அதிர்கிறார். பச்சிளம் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோரிடம் எடுத்து செல்ல, அவர்களும் நிராகரிக்க, அனாதை ஆசிரமத்தில் விட சென்று, பின்னர் மனம் மாறி தானே வளர்க்க முடிவு செய்கிறார். அந்த குழந்தைக்கு ஆதித்யா என்று பெயர் சூட்டி வளர்கிறார். மகன் வந்த பின்னர், பொறுப்புள்ள தந்தையாக மாறும் மணி, அவனுக்காக நன்றாக சம்பாதிக்க ஒரு ஐடி கம்பெனியில் சேருகிறார். அங்கே தன்  மனைவி சிந்துவை பார்க்கிறார். அதன் பின் மணி வேலையை தொடர்ந்தாரா? மகனை பற்றி மனைவியிடம் சொன்னாரா?  சிந்து ஏன் மணியை பிரிந்து சென்றார்? காரணம் என்ன? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

ஒரு குழந்தையை மனைவியோ கணவரோ ஒற்றை ஆளாக இருந்து சம்பாதித்து வளர்ப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதை இந்தப் படத்தில் மணிகண்டனாக வரும் கவின் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. எதற்குமே அழாத குணம் கொண்ட கவின் தன் மகனை அனாதை ஆசிரமத்தில் விட்டு விட்டு வரும் போது வரும் கண்ணீர் துளி  மனதை மாற்றி திரும்ப சென்று மன்றாடி குழந்தையை மீட்டு வருவது தந்தையின் பாசத்திற்கு ஒரு சான்று. வாழ்க்கையே மகனால் அழகாகும் போது, தான் செய்த தவறை உணர்ந்து திருந்துவதும், மகனுக்காக நல்ல வேலையில் சேர்ந்து சந்தோஷத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதிலாகட்டும், மனைவியை பார்த்தவுடன் அதிர்ச்சியும், கோபமும் வந்தாலும் மனைவிக்கு வரும் தொல்லைகளை பொறுமையாக கையாண்டு விலக்குவதும் என்று ஒவ்வொரு காட்சியிலும் கவினின் நடிப்பு அற்புதம். மகனையும், மனைவியையும் சேர்த்து வைக்கும் க்ளைமேக்ஸ் காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார். கவினின் கதைக்தேர்வு வெற்றியின் படிக்கட்டுகளாக செல்வதாலும், அவருக்கு இருக்கும் கிரேசும் வளர முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தில் அவரின் கெட்டப் ஒவ்வொரு காலகட்டத்திற்குகேற்றவாறு மாறுபடுவது பொருந்தி இருக்கிறது. வெல்டன் கவின்.

சிந்துவாக அபர்ணா தாஸ் அழகு, நடிப்பு இரண்டும் இருக்க முதலில் காதலியாக சந்தோஷமான தருணமும், பின்னர் கர்ப்பிணி மனைவியாக கடினமான தருணத்தை கையாண்ட விதம் அருமை. முதலில் பரிதாபம் ஏற்பட வைக்கும் அளவிற்கு காட்டப்பட்டு, குழந்தை பிறந்தவுடன் விட்டு விட்டு செல்லும் போது ஒரு நெகடிவ் தன்மை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு அதற்கான காரணத்தை இறுதியில் சொல்லும் போது பொருத்தமாக அமைந்து விடுவதால்  சிந்துவாக அபர்ணா தாஸ் பாஸ் மார்க் வாங்கி தேறி விடுகிறார். முதலில் கவின் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது சிந்து செய்தது சரி என்ற கோணத்தில் இருந்தாலும், அதுவே கவினின் மனமாற்றத்திற்கு ஒரு உந்து சக்தியாக  இருப்பது படத்திற்கு ப்ளஸ்.

குழந்தை ஆதித்யா அழகான, நேர்த்தியான தேர்வு.

பாக்யராஜ், ஐஸ்வர்யா, கலகலப்புக்கு விடிவி கணேஷ், மோனிகா சின்னகோட்லா உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கி அசத்தியுள்ளனர்.

படத்தின் பல்வேறு கட்டங்களில் நுழையும் துணைக் கதாபாத்திரங்கள் ஏராளமாக உள்ளன, ஒவ்வொன்றும் அவரவர் வழியில் தங்கள் முத்திரையை பதிக்கிறார்கள். குறிப்பாக, மணிகண்டனின் நண்பரான அமித் கதாபாத்திரத்தில் ஹரிஷ்குமார் நடித்துள்ளார். இரண்டாம் பாதியில், அலுவலகத்தில் உள்ள மணிகண்டனின் குழுவினரும் படத்தை நன்றாகத் தாங்கி, தங்கள் நடிப்பின் மூலம் கவினுக்கு சரியான ஆதரவை வழங்குகிறார்கள்.

இசையும் பாடல்களும் மட்டுமின்றி பெரும்பாலான காட்சிகளில் பின்னணி மூலம் படத்திற்கு மேலும் உயிர் கொடுத்து   மனதை வருடி விடுகிறார் இசையமைப்பாளர் ஜென் மார்டின்.

எழில் அரசின் திறமையான ஒளிப்பதிவு, கதிரேஷ் அழகேசனின் கச்சிதமான எடிட்டிங் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை ;கொடுத்து காட்சிக்கோணங்களில் வர்ணஜாலத்தை நிகழ்த்தியுள்ளனர்.

பல படங்களில் சிங்கிள் பேரண்ட் வளர்க்கும் பிள்ளைப்பற்றி பெண்களின் பார்வையில் கதை நகரும் ஆனால் இந்தப்படத்தில் தந்தையின் பார்வையில் பிள்ளையை வளர்ப்பது போன்று திரைக்கதையமைத்து அதில் நட்பு, நகைச்சுவை, காதல், பாசம், செண்டிமெண்ட் கலந்து ஐ டி கம்பெனி பின்னணியில் நச்சென்று திரைக்கதையமைத்து டாடா படத்தை திறம்பட கொடுத்துள்ளார் புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு. முதல் பாதி சிக்கல்கள் நிறைந்த இனிமையான வாழ்க்கையோடு இரண்டாம் பாதி நல்ல் காதல் நகைச்சுவை கலந்து கலகலப்பாக சென்று சிறப்பான முடிவை கொடுத்துள்ளார் இயக்குனர் கணேஷ் கே.பாபு. முதல் காட்சியில் படுத்தபடி இரண்டு பேராக தொடங்கும் காட்சி முடியும் போது அதே போல் மூன்று பேராக படுத்திருப்பது போல் காட்சிப்படுத்தி முடித்திருப்பதிலேயே மொத்த கதையையும் உணர்த்தி வசூலில் வெற்றி வாகை சூடியுள்ளார் இயக்குனர் கணேஷ் கே.பாபு.

மொத்தத்தில் ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் டாடா பாசமிகு நேசமிகு சிங்கிள் டாடிக்களுக்கு சமர்ப்பணம்.