பொன்னியின் செல்வன் 2 திரைவிமர்சனம்: பழி வாங்கும் வஞ்சக கூட்டத்தில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற நடக்கும் இறுதிக்கட்ட போரில் வெற்றி வாகை சூடும் வீர சோழ சாம்ராஜ்ஜித்தின் பேரரசன் | ரேட்டிங்: 4/5

0
838

பொன்னியின் செல்வன் 2 திரைவிமர்சனம்: பழி வாங்கும் வஞ்சக கூட்டத்தில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற நடக்கும் இறுதிக்கட்ட போரில் வெற்றி வாகை சூடும் வீர சோழ சாம்ராஜ்ஜித்தின் பேரரசன் | ரேட்டிங்: 4/5

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் மற்றும் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம்.

இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசையமைப்பாளர்: ஏஆர் ரஹ்மான், ஒளிப்பதிவு: ரவிவர்மன், எடிட்டர்: ஸ்ரீPகர் பிரசாத், கலை இயக்குநர் தோட்டா தரணி, மக்கள் தொடர்பு : ஜான்சன்

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு முதல் பாகத்தின் தமிழ் பதிப்பு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அதே போல் பொன்னியின் செல்வனின் பாகம் 2; ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையிலான பதின்பருவக் காதலை, சோழர் குலத்தைப் பழிவாங்குவதில் நந்தினிக்கு இருக்கும் வன்மமும், பிற்பகுதியில் கடம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலனுக்கும், நந்தினிக்கும் நடக்கும் சந்திப்பு, அதன் பின் நடக்கும் சம்பவங்களும் படத்தின் போர்கள காட்சிகளுடன் படம் நிறைவுபெறுகிறது.

இலங்கையில் பாண்டியர்களுடன் போரிட்டு கடலில் மூழ்கிய அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) மற்றும் வல்லவரையன் வந்தியதேவன் (கார்த்தி) ஆகியோர் ஊமைப் பெண் மந்தாகினி (ஐஸ்வர்யா ராய்) மற்றும் பூங்குழலியால் (ஐஸ்வர்யா லட்சுமி) படகில்  காப்பாற்றப்பட,  இவர்கள் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருண்மொழி வர்மன் இலங்கையில் புத்தர்களால் சிகிச்சை பெற்று நலம் பெற்று வருகிறார். அதே நேரத்தில், பாண்டிய ஆபத்துதவிகளோடு நந்தினி (ஐஸ்வர்யா ராய்) சோழ வாரிசுகளையும், சுந்தர சோழ அரசரையும் கொல்வதன் மூலம் சோழப் பேரரசை முடிவுக்குக் கொண்டு வரும் சதித்திட்டத்தை திட்டமிடுகிறார். ஆதித்ய கரிகாலனை (விக்ரம்) சூட்சமமாக கடம்பூர் அரண்மனைக்கு வரவழைத்து  மதுராந்தகனை (ரஹ்மான்) சோழ மன்னனாக்க சோழ வம்சத்தின் தலைவர்கள் முயற்சிக்கும் நேரமும் அரங்கேறுகிறது. இவர்களின் சதித்திட்டத்தை அறிந்தும் ஆதித்ய கரிகாலன் எடுக்கும் முடிவு என்ன? வந்திய தேவனால் ஆதித்ய கரிகாலன் எச்சரிக்கப்பட்டரா? வந்தியதேவன் மீது குந்தவை (த்ரிஷா) கொண்ட காதல் என்னவானது? மந்தாகினி அருண்மொழி வர்மனை காப்பாற்ற காரணம் என்ன? மந்தாகினிக்கும் நந்தினிக்கும் இருக்கும் தொடர்பு என்ன? இறுதியில் நந்தினியின் சூழ்ச்சியும், சதித்திட்டமும், வெற்றி பெற்றதா? ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்? இறுதியில் சோழ அரசராக முடிசூடியது யார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

இரண்டாம் பாகத்தில் முக்கிய காட்சிகள் ஆதித்ய கரிகாலனாக விக்ரமின் இளமைகால பருவ காதல், தோல்வி, நந்தினியின் சூழ்ச்சியை அறிந்தும் தைரியமாக எதிர்கொள்ளும் திறன், இறுதியில் ஆதித்ய கரிகாலன் காதலியின் கையால் இறப்பதை விரும்பி துணிச்சலாக முடிவு எடுப்பது என்று படம் முழுவதும் தன் ஆக்ரோஷமான, காதல் உணர்ச்சிகள் நிறைந்த நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் நம்மை ஆட்கொள்கிறார் விக்ரம்.

தாய் மந்தாகினியாக, மகள் நந்தினியாக  இரு வேடங்களில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனித்துவமான நடிப்பு இரண்டில் நந்தினி கதாபாத்திரம் பழி வாங்குதலின் உச்சத்தை காட்டி தனிமுத்திரை பதித்துள்ளார். சோழ சாம்ராஜ்ஜியத்தை அழிக்க துடிக்கும் திறன், ஆளுமை, வசீகர அழகு, தன் முன்னால் காதலன் ஆதித்ய கரிகாலனை வரவழைத்து பேசும் வசனங்கள், மனதில் ஏற்படும் பலவித உணர்ச்சிகளை தன் கண்களால் காண்பித்து தன் அழகாலும், ஆழமான நடிப்பாலும் திக்குமுக்காட வைத்துள்ளார் ஐஸ்வர்யா பச்சன்.

வல்லவரையான் வந்தியதேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் படத்தின் முக்கிய காட்சிகளில் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்.

வந்தியத்தேவனின் காதல் வலையில் சிக்கும் குந்தவை த்ரிஷா, அருண்மொழிவர்மனை காதலிக்கும் சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி,ஆழ்வார்க்கடியான் நம்பி ஜெயராம், பெரிய பழுவேட்டரையராக வரும் சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக வரும் பார்த்திபன், மதுராந்தகன் ரகுமான், செம்பியன் மாதேவி ஜெயசித்ரா, பாலாஜி சக்திவேல், சுந்தர சோழர் பிரகாஷ்ராஜ், பார்ப்பேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, பெரிய வேளாளர் பிரபு, பாண்டிய நாட்டின் ரவி தாசன் ஆக வரும் கிஷோர், சேர்ந்தன் அமுதன் உள்ளிட்ட பலர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இசையமைப்பாளர்: ஏஆர் ரஹ்மான் முதல் பாகத்தில் அதிரடி பாடல்கள் கொடுத்தாலும், இரண்டாம் பாகத்தில் ரம்மியமான இசையாலும், பாடல்களாலும் நிறைத்து, பின்னணி இசையில் அதகளம் செய்துள்ளார்.

இலங்கை புத்த மடாலயம், பிரமாண்ட கடம்பூர் மாளிகை, அரண்மனை ஒளிவிளக்குகள் சூழ்ந்த அறை, போர்க்கள காட்சிகள், சோழ கால கட்டத்தின் வரலாற்று சான்றுகள் என்று பார்த்து பார்த்து காட்சிகளை செதுக்கி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா.

எடிட்டர்: ஸ்ரீPகர் பிரசாத், கலை இயக்குநர் தோட்டா தரணி ஆகியோரின் கைத்திறனால் படத்தின் காட்சிகளை விறுவிறுப்பாக்கியுள்ளனர்.

முதல் பாகத்தில் கதாபாத்திரத்தின் விவரிப்பு அதிகமாகவும், பாடல்கள் அதிரடியாகவும் இருந்து சிறப்பித்திருக்க, இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நுணக்கங்களை கதையுடன் இணைத்து அதற்கான காரணத்தை விவரித்து செல்லும் கதையில் புரியாத புதிருக்கான விடையும், விளங்கங்களும் எளிதாக புரியும்படி சூழ்ச்சி, பழிவாங்குதல், துரோகம், காதல்  அனைத்தையும் மொத்த கலவையாக திறம்பட இயக்கத்தால் சாதிக்க முடியாது என்று நினைத்த பெரும் வரலாற்று புனைக்கதையை சில பல மாற்றங்களை செய்து நம்பும்படியான திரைக்கதையோடு சாதனையுடன் நிகழ்த்தி காட்டி இயக்குனர்களின் மணிமகுடமாக மணிரத்னம் இடம்பிடித்துள்ளார். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் மற்றும் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 பழி வாங்கும் வஞ்சக கூட்டத்தில் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற நடக்கும் இறுதிக்கட்ட போரில் வெற்றி வாகை சூடும் வீர சோழ சாம்ராஜ்ஜித்தின் பேரரசன்.