தெய்வ மச்சான் திரைவிமர்சனம் : தெய்வ மச்சான் வித்தியாசமான கோணத்தில் அனைவரையும் சிரிக்க வைத்தான் அனைவர் மனதிலும் தங்கச்சி புருஷன் மச்சானாக தடம் பதித்தான் | ரேட்டிங்: 3.5/5

0
437

தெய்வ மச்சான் திரைவிமர்சனம் : தெய்வ மச்சான் வித்தியாசமான கோணத்தில் அனைவரையும் சிரிக்க வைத்தான் அனைவர் மனதிலும் தங்கச்சி புருஷன் மச்சானாக தடம் பதித்தான் | ரேட்டிங்: 3.5/5

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் சார்பில் உதயகுமார் – கீதா உதயகுமார் மற்றும் எம் பி வீரமணி தயாரித்திருக்கும் தெய்வ மச்சான் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் மார்ட்டின் நிர்மல் குமார்.

இதில் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், பாலசரவணன்,ஆடுகளம் நரேன்,வேல ராமமூர்த்தி, வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: திரைக்கதை : மார்ட்டின் நிர்மல் குமார் மற்றும் வத்சன் வீரமணி, எடிட்டிங் : இளையராஜா.எஸ், ஒளிப்பதிவு : கேமில் ஜே அலெக்ஸ்,பின்னணி இசை – அஜீஷ், கலை : நித்யா, ஒலி கலவை : டி.உதய் குமார், மக்கள் தொடர்பு : யுவராஜ்

திண்டுக்கல் அய்யம்பாளையத்தில் (தபால்) கார்த்தி (விமல்)  மின்சாதன பொருட்கள்; விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். தந்தை பரந்தாமன் (பாண்டியராஜன்) அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தைகள் மற்றும் தங்கை குங்குமத்தேன் (அனிதா சம்பத்) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழ்கிறார். இவரது நண்பன் முருகன் (பாலசரவணன்).  தங்கை குங்குமத்தேனின் திருமணம் பல காரணங்களால் தடைப்பட்டு போக, மனம் நொந்து போகிறான் கார்த்தி. இதனிடையே ஜமீன் வரன் வர மகிழ்ச்சியில் திலைக்கும் கார்த்தி குடும்பத்திற்கு அந்த வரன் வயதான வரன் என்று தெரிய வந்து சண்டையில் முடிகிறது. இதனால் கோபமடையும் ஜமீன் குடும்பம் கார்த்தியின் தங்கை திருமணத்தை நடக்க விடாமல் முயற்சிகள் செய்தாலும் குங்குமத்தேனுக்கு ஒரு நல்ல வரன் அமைந்து திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அதே சமயம் பல ஆண்டுகளாக கார்த்தியின் கனவில் வரும் மரண விஷயங்கள் நிகழ்காலத்தில் அப்படியே நடக்கிறது. அந்தக் கனவில் ஒரு வெள்ளை குதிரையுடன்; சாட்டைக்காரன் (வேல ராமமூர்த்தி) அவனது கனவில் தோன்றி குடும்பத்தில் நடக்கும் மரணத்தை சொன்னால் அப்படியே நடப்பதை கார்த்தி உணர்ந்து இருக்கிறான். தங்iயின் திருமண ஏற்பாடுகள் நடக்கும் போது கார்த்தியின் கனவில் வெள்ளைக் குதிரையுடன் தோன்றும் சாட்டைக்காரன் தங்கச்சி புருஷன் மச்சான் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என்று சொல்லி அதிர்ச்சி அளிக்கிறார். கார்த்தி கதி கலங்கி போய் விடுகிறான்.இதனால் தங்கை திருமணத்தை நிறுத்த முயற்சிக்க, பல தடைகளை தாண்டி திருமணம் நடைபெற்று விடுகிறது. பின்னர் வேறு வழியின்றி தங்கை புருஷனை எந்த ஆபத்தும் அண்ட விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறான். இரண்டு நாட்கள் தங்கை புருஷனை கார்த்தி மரணம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாரா? அந்த தங்கை புருஷன் மச்சான் யார்? இந்த குழப்பத்திற்கான விடை தான் கலகலக்கும் படத்தின் க்ளைமேக்ஸ்.

கிராமத்து இளைஞன் கார்த்தியாக விமல் தங்கைக்காக எடுக்கும் முயற்சிகள், ஏற்படும் பகைகள், கனவின் பயமுறுத்தல், மச்சானின் பாதுகாப்பு என்று தன்னை துரத்தும் அத்தனை துன்பங்களையும் வெள்ளந்தி மனதுடன் தைரியமாக போராடி வெற்றி காணும் கதாபாத்திரம். அதை நிறைவாகவும், நகைச்சுவையோடு தெரியும் அளவிற்கு உள்வாங்கி சிறப்பாக செய்துள்ளார். தபால் கார்த்தி என்ற பெயர் காரணம், அந்த தங்கை புருஷன் மச்சான் தான் தான் என்று கதைக்களம் திரும்பும் போது ஏற்படும் பதற்றம், தன்னை காப்பாற்ற எடுக்கும் முயற்சி என்று பல சம்பவங்களில் கவனிக்க வைத்து ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறார் விமல். விமலுக்கு கிராமத்து இளைஞன் வேடங்கள் அம்சமாக பொருந்துவதால் வெற்றி ஃபார்மூலாவுடன் வலம் வருகிறார். வெல்டன்.

தங்கை குங்குமத்தேனாக அனிதா சம்பத் கதைக்களமே இவரைச்சுற்றித்தான் நகர்வதால் படத்திற்கு அச்சாணி இவர் என்றால் மிகையாகாது. தந்தை பரந்தாமனாக பாண்டியராஜன் பந்தாவாக வந்து போகிறார், பெரிய ஜமீனாக ஆடுகளம் நரேன், சாட்டைக்காரனாக வேல ராமமூர்த்தி, அழகராக வத்சன் வீரமணி, மணி மாமாவாக கிச்சா ரவி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து விறுவிறுப்பை எகிறச் செய்கிறது.

அத்தை மஞ்சுளாவாக தீபா சங்கர் தடங்களின் மொத்த உருவம், ஆனால் கலகலப்பில் உச்சம். மற்றும் நண்பன் முருகனாக பாலசரவணனின் காமெடிகள் ரசிக்கும் வகையில் உள்ளது.

கிராமத்து எழிலையும், மண் மாறாத கிராமத்து வாழ்க்கையையும், திருமண சடங்குகளையும், கிராமத்து பகையையும், குதிரையில் வரும் சாட்டைக்காரனின் மிரட்டலையும் ஒரு சேர தன் காட்சிக்கோணங்களால் திறம்பட கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கேமில் ஜே அலெக்ஸ்.

இளையராஜா படத்தொகுப்பு, இசையமைப்பாளர் காட்வின் ஜே கோடன் மற்றும் அஜீஷின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்து மெருகுகூட்டுகிறது.

அண்ணன் தங்கை உறவில் இடையே வரும் புது சொந்தம் மச்சானாக உருவெடுக்க அதனால் ஏற்படும் விபரீத வில்லங்கத்தை தன்னுடைய யதார்த்தமாக கிராமத்து வாழ்க்கையுடன் இணைத்து கற்பனை, சென்டிமெண்ட், காமெடி கலந்து இறுதி வரை படத்தின் மீதிருக்கும் எதிர்பார்ப்பை தக்க வைத்து நல்ல கதையம்சத்துடன் வித்தியாசமாக யோசித்து கலகலவென்று கொடுத்துள்ளார் இயக்குனர் மார்ட்டின்.

மொத்தத்தில் உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் சார்பில் உதயகுமார் – கீதா உதயகுமார் மற்றும் எம் பி வீரமணி இணைந்து தயாரித்திருக்கும் தெய்வ மச்சான் வித்தியாசமான கோணத்தில் அனைவரையும் சிரிக்க வைத்தான் அனைவர் மனதிலும் தங்கச்சி புருஷன் மச்சானாக தடம் பதித்தான்.