கேப்டன் மில்லர் விமர்சனம் : ‘கேப்டன் மில்லர்’ ஒடுக்கப்பட்ட மறுக்கப்பட்ட சம உரிமை, மரியாதை, கண்ணியத்துடன் சுதந்திர காற்றை சுவாசிக்க புறப்படும் ஒரு தீரனின் வீரனின் கிளர்ச்சிகள் நிறைந்த மீட்பு போராட்டம் | ரேட்டிங்: 4/5
சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்திருக்கும் ‘கேப்டன் மில்லர்” படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.
இதில் தனுஷ், டாக்டர் சிவ ராஜ்குமார், சுந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், அதிதி பாலன், குமரவேல், எட்வர்ட், ஜான் கோக்கன், வினோத் கிஷன்,விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு : சித்தார்த்தா நுனி, வசனம்: மதன் கார்க்கி, படத்தொகுப்பாளர்: நாகூரன், கலை இயக்குனர் : டி.ராமலிங்கம், ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஸ்ரீராம், சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன்,பிஆர்ஒ – ரியாஸ் கே அகமது, சதீஷ் (ஏய்ம்)
ஆங்கிலேயர் ஆட்சியின் போது சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் தமிழகத்தின் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள பழங்குடியினரின் பாதுகாவலராக கொரனார் தெய்வம்; இருக்கிறது. இந்த தெய்வம் பழங்குடியினரை 600 ஆண்டுகளாக பாதுகாத்து வருவதாக நம்பப்படுகிறது. அவர்களின் 600 ஆண்டுகள் பழமையான உள்@ர் சிவன் கோவிலின் மூலஸ்தானத்தில் பூமிக்கடியில் அய்யனார் கொரனாரின் சிலை ரகசியமாக புதைக்கப்பட்ட கதையை கேப்டன் மில்லரின் (தனுஷ்) தாயார் (விஜி சந்திரசேகர்) அதன் வரலாற்றைப் பற்றி பழங்குடி மக்களுக்கு சொல்வதைப் போல் கதைக்களம் ஆரம்பிக்கிறது. கோயில் கட்டப்பட்டபோது கோயிலைச் சுற்றியுள்ள நிலங்கள் உள்@ர் பழங்குடியினருக்கு எவ்வாறு பரிசளிக்கப்பட்டன, ஆனால் சாதி மற்றும் சமூக பாகுபாடு காரணமாக அப்பகுதியை ஆளும் அரசர்களால் அவர்கள் அதில் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதை அவர் விவரிக்கிறார். கேப்டன் மில்லரின் மூத்த சகோதரர் செங்கோலன் (சிவ ராஜ்குமார்) சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியின் தலைவனாக இருந்து பழங்குடி மக்களின் உரிமையை ராஜாதிபதி அரசர் மற்றும் இளவரசரிடமிருந்து மீட்டெடுக்க மறைமுகமாக போராடுகிறார். இந்த போராட்டங்களினால் தாயாரின் இறப்புக்கு வராமல் தலைமறைவாக இருக்கும் அண்ணன் மேல் கோபமாக இருக்கும் அனலீசன்(எ)இசா(எ) கேப்டன் மில்லர்(தனுஷ்) கிராமவாசிகளுடன் மோதலில் ஈடுபட்டு, அவர்கள் வெளியேறச் சொல்லும்போது, தனக்குரிய ‘மரியாதை’ பெற பிரிட்டிஷ்-இந்திய இராணுவத்தில் சேர இசா முடிவு செய்கிறார். அண்ணன் செங்கோலன் திரும்பி வந்து அறிவுரை சொன்னாலும் அதை ஏற்காமல் இசா பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்கிறார், அவருடைய விதி மாறுகிறது. பிரிட்டிஷ் இராணுவத்தால்; மில்லர் என்று பெயரிடப்பட்டு; பிரிட்டிஷ் பட்டாலியனின் ஒரு அங்கமாகிறார். பிரிட்டிஷ் பட்டாலியனின் நிர்பந்தத்தில் மில்லர் உள்@ர் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பயங்கரமான தாக்குதலில் ஈடுபட்டு தன் சொந்த பழங்குடி மக்களை கொல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத மில்லர் அதிர்ச்சியடைந்து குற்ற உணர்ச்சியால் இராணுவத்தை விட்டு வெளியேறுகிறார். உள்@ர் மக்கள் மில்லரை கிராமத்திலிருந்து துரத்துகின்றனர். வேறு வழியின்றி புரட்சிப்படையில் சேர்ந்து புரட்சியாளராக கேப்டன் மில்லராக மாறுகிறார். இதற்கிடையில், கொரனார் தெய்வத்தின் சக்தியைப் பற்றி கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள், கோஹினூரைப் போலவே, பிரிட்டன் மன்னரை மகிழ்ச்சிப்படுத்த கொரனார் சிலையை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். பிரிட்டிஷ் படையின் தாக்குதலுக்கு பயந்து வேறு வழியின்றி, உள்@ர் ராஜாதிபதி அரசர்(ஜெயபிரகாஷ்) தெய்வத்தை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கிறார்.அதன் பின் அரசர் கேப்டன் மில்லருக்கு (தனுஷ்) தூது விட்டு பிரிட்டிஷ் படையிடமிருந்து அந்த கொரனார் சிலையை மீட்கச் சொல்கிறார். அதன்படி சிலையை மீட்டால் கிராமவாசிகளை கோயிலுக்கு அனுமதிக்கும் வாய்ப்பையும் பணத்தையும் தருவதாக அரசர் வாக்குறுதி அளிக்கிறார். கொரனார் தெய்வம் மீண்டும் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டதா? அல்லது முரட்டுத்தனமான கேப்டன் மில்லரின் மனதில் வேறு திட்டம் இருந்ததா? இறுதியில் பிரிட்டிஷ் பெரும்படையை தோற்கடித்தாரா கேப்டன் மில்லர்? சொன்ன வாக்கை காப்பாற்றினாரா அரசர் ? என்று க்ளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பங்களுடன் முடிவடைகிறது.
இப்படத்தில் தனுஷ் மூன்று வித்தியாசமான தோற்றங்களுடன் அனலீசனாக இருந்து பின்னர் கேப்டன் மில்லராக மாறும் இடங்களில் தடம் பதித்திருக்கிறார். தனுஷ் அவருக்காக நேர்த்தியுடன் எழுதப்பட்ட ஒவ்வொரு மாஸ் காட்சியையும் ரசிக்கும்படி அசுர பலத்துடன் நடித்துள்ளார். முதலில் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டாலும், பின்னர் போராட்ட குணம் கொண்ட போராளியாக, புரட்சியாளராக, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஆக்ரோஷத்தையும், உணர்ச்சிகளையும் வெறித்தனமாக வெளிப்படுத்தி ஆக்ஷன் காட்சிகளிலும், துப்பாக்கி ஏந்தி எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளிலும் அதகளம் பண்ணியிருக்கிறார். வெல்டன். விருதுகள் நிச்சயம் காத்திருக்கிறது.
செங்கோலனாக டாக்டர். சிவராஜ்குமார் போராட்ட வீரராக மாஸாக, கிளாசாக ஆரம்பத்திலும் முடிவிலும் வந்து முக்கிய தருணங்களில் அப்ளாஸ் வாங்குகிறார். தனுஷின் அண்ணன் செங்கோலனாக சிவராஜ்குமார் சரியான தேர்வு. அவர்கள் போராடும் காரணத்தில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் ஒன்றாக வரும்போது, பெரிய திரையில் இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் திரையை ஆக்ரமிக்கிறது. சிவராஜ்குமார்; அடிப்படையில் ஜெயிலர் படத்தில் வருவது போல் இறுதிக் காட்சியில் அசத்தல் ஆக்ஷன் காட்சிகள் அற்புதம்.
பிரியங்கா மோகன் வேல்மதியாக, சந்தீப் கிஷன் ரஃபியாக, இளங்கோ குமரவேல் கண்ணையாவாக, நிவேதிதா சதீஷ் தென்பசியார்யாக, அதிதி பாலன் சகுந்தலாவாக, வினோத் கிஷன் டேனியல் முத்துசாமியாக, அப்துல் லீ செம்பட்டை ஸ்டீபனாக, விஜி சந்திரசேகர் பேச்சம்மாவாக, ஜான் கொக்கன் சேனாதிபதியாக, ஜெயபிரகாஷ் ராஜாதிபதியாக, பிந்து பாண்டு காளியாக, ராஜரிஷி காங்காய் கருப்புவாக, காளி வெங்கட் கனகசபையாக, அசுரன் ஜே.கே. வின்சென்ட் பிள்ளையாக, ஸ்வயம்சித்தா தாஸ் அனுசுயாவாக, போஸ் வெங்கட் ஒத்தக்கண் கொல்லையனாக, அருணோதயன் அய்யாவுவாக, சுவாதி கிருஷ்ணன் குயிலியாக, ஆண்டனி ஆண்டியப்பனாக, ஐஸ்வர்யா ரகுபதி ராக்காயியாக, எட்வர்ட் சோனென்ப்ளிக் ஆண்ட்ரூ வாண்டியாக, அஸ்வின் குமார் ஜேம்ஸ்சாக, அலெக்ஸ் ஓ நீல் ரீலியாக, மார்க் பென்னிங்டன் ஜெனரல் புல்லராக, டேவிட் ஹாரிசன் தாமஸ்சாக, முருகன் மண்ணாங்கட்டியாக, அஷ்ரப் மல்லிசேரி செட்டா ஒல்லாக்காவாக, ஸ்டண்ட் கணேசன் ஓடுக்குவாக மற்றும் எண்ணற்ற கலைஞர்களின் பங்களிப்பு படத்திற்கு உயிர்நாடியாக இருந்து முன்னெடுத்து செல்கின்ற முக்கிய தருணங்களில் பிரகாசிக்கின்றனர்.
தனுஷ் தான் படத்தின் ஆக்ஷன் நாயகன் என்றாலும் படத்தின் இன்னொரு சைலன்ட் ஹீரோ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் தனது அற்புதமான பின்னணி இசையுடன் படத்தில் இல்லாத உணர்ச்சிகளை இசையால் வெளிப்படுத்தும் ஆற்றலும், திறமையும் தெரிகிறது. எலிவேஷன் பிஜிஎம் சமீப காலங்களில் மிகச் சிறந்த ஒன்றாக உள்ளது மற்றும் புல்லட் ஒலிகளுடன் இணைந்து, இசை படம் முழுவதும் க்ரெசென்டோவைத் தாக்குகிறது. பாடல்களில் அவர் கிராமப்புற தாளங்களை இணைத்து, பார்வையாளர்களை அமைதிப்படுத்துவதோடு, உற்சாகப்படுத்துவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். படம் முடிந்தும் நம் காதுகளில் அவரின் பின்னணி இசையின் அதிர்வையும் தாக்கமும் உணர முடிகிறது. பாராட்டுக்கள்.
சில அற்புதமான கேமரா வேலைகளுடன் இது ஒரு கவிதையான ஆக்ஷன் படமாக அமைந்திருக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் நல்ல ஆக்ஷன் காட்சிகளுடன் ஒன்ற வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி. அவரின் அற்புதமான நீண்ட காட்சிகளுடன் கூடிய தருணங்களையும், சில காட்சிகளில் பழைய ஹாலிவுட் அதிர்வைத் தருகிறார் – கிளாசிக் படங்களில் நீங்கள் காணும் கலவையை உணரச்;செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி.
மதன் கார்க்கியின் வசனங்கள், நாகூரன் படத்தொகுப்பு, டி.ராமலிங்கம் கலை இயக்கம், பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஸ்ரீராம் ஆடை வடிவமைப்பு, திலிப் சுப்பராயன் புல்லட் தெறிக்கும் சண்டைக்காட்சிகள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தொழில்நுட்ப கலைஞர்;களின் பங்களிப்பு செதுக்கிய அழகிய சிற்பம் போல் அவர்களின் கைவண்ணத்தில் ஜொலிக்கிறது.
அருண் தனக்கே உரித்தான வன்முறைக் கதையைச் சொல்வதில் பெயர் பெற்றவர். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பார்வையில் சுதந்திரப் போராட்டக் கதையைச் சொல்லும் அரிய திரைப்படங்களில் ஒன்று கேப்டன் மில்லர். பிரிசிட்டிஷர்களிடமிருந்து மட்டுமல்ல, ஒடுக்குமுறையாளர்களிடமிருந்தும் சுதந்திரத்திற்கான போராட்டத்தைப் பற்றிய படம். துப்பாக்கி வன்முறையை உள்ளடக்கிய பல்வேறு அதிரடித் தொகுப்புகளால் படம் நிரம்பியுள்ளது, ராக்கி மற்றும் சானி காயிதம் போலவே, மில்லர் சமூகத்தில் தூக்கி எறியப்பட்ட ஒரு பின்தங்கிய நபரைப் பற்றியது, அவர் பீனிக்ஸ் பறவையைப் போல வளர்ந்து பலம் உள்ளவர்களிடம் மோதி போரிட்டு வெற்றி பெறுகிறார். அருண் மாதேஸ்வரனின் கதை சொல்லும் பாணியில் கேப்டன் மில்லரிலும் நான் லீனியர் முறையில் கதையைக் கையாண்டுள்ளார் மற்றும் 6 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு; விவரித்து இறுதியில் ஆறாவது அத்தியாயம் பழி வாங்க அடித்தளமிடும் ஒரு தொடர்ச்சியைக் குறிக்கும் வகையில் முடித்திருக்கிறார். அவரது முந்தைய படங்களைப் போலவே, ஒரு சமூக-அரசியல் அடிநாதத்துடன், ஜாதிப் பாகுபாடுடன் கதையை எழுப்பி, இறுதியில் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும், இன்றைய காலகட்டத்திற்கேற்ற பொருத்தமான ஒரு செய்தியை வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடி மெகா வசூல் மழையை குவித்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
மொத்தத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்திருக்கும் ‘கேப்டன் மில்லர்’ ஒடுக்கப்பட்ட மறுக்கப்பட்ட சம உரிமை, மரியாதை, கண்ணியத்துடன் சுதந்திர காற்றை சுவாசிக்க புறப்படும் ஒரு தீரனின் வீரனின் கிளர்ச்சிகள் நிறைந்த மீட்பு போராட்டம்.