இரவின் நிழல் விமர்சனம்: 365 பேரின் தன்னலமற்ற விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி இரவின் நிழல் |மதிப்பீடு: 3.5/5
பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் – அகிரா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் படத்தின் கதையை உருவாக்கி மன சிந்தனையில் உருவம் கொடுத்து நிஜத்தில் மெய்பித்து இயக்கியிருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
இதில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஜோசுவா பரிசுத்தம், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், ப்ரிகிடா சகா, புதுமுகங்கள் சினேகா குமார்,ஆனந்தகிருஷ்ணன், சாய் பிரியங்கா ரூத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மிகத் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு-ஆர்தர் வில்சன், கலை இயக்குனர்-விஜய் முருகன்,கிம்பள் சாதனம் ஒளிப்பதிவு கலைஞர் – ஏ.கே.ஆகாஷ், காமிரா போகஸ் புல்லர்ஸ் – சங்கரன் டிசோசா, ராஜேஷ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
நந்துவாக பார்த்திபன் குழந்தைப்பருவம், பத்து வயது, பதினெட்டு வயது, முப்பது வயது, நாற்பது வயது மற்றும் ஐம்பது வயது ஆக மொத்தம் ஆறு பருவங்களின் சம்பவங்களை விவரிக்கும் உலகின் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல். நான் லீனியர் என்பது படத்தின் கதைக்களம் ஒரே நேர்கோட்டில் அமைக்காமல் முன்னும் பின்னும் நடக்கும் பல்வேறு விதமான காட்சிகளை காண்பித்து அதே சமயம் கதையின் தன்மை மாறாமல் புரியும்படி எடுப்பதே ஆகும். இதை சாதாரண படமாக எடுத்துக் கொண்டு செல்லலாம். ஆனால் வித்தியாசத்திற்கு பேர் போன பார்த்திபன், ஒரே ஷாட்டில் 93 நிமிடங்களில் எந்த ஒரு தடங்கலுமின்றி வெற்றிகரமாக எடுத்து முடித்து ஏசியன் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் ஆகிய இரண்டில் இடம் பிடித்தது மட்டுமில்லாமல் பல உலகளவில் சினிமா விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளிக் கொண்டு வந்து உள்ளார். இன்னும் பல விருதுகள் வெளியீட்டிற்கு பிறகு காத்துக் கொண்டிருக்கிறது என்பது நிழல் அல்ல நிஜம். இதற்காக 23 முறை முயற்சி செய்து ஏதாவது தடங்கல் வந்து தடைபட இறுதியில் சிங்கிள் ஷாட்டில் வெற்றிகரமாக எடுத்துமுடித்து சாதித்து காட்டியுள்ளார் சாதனையாளர் பார்த்திபன்.
தாயின் நடத்தை மேல் சந்தேகப்பட்டு தந்தை கொன்று ஜெயிலுக்குசென்றுவிட குழந்தைப்பருவத்திலேயே ஆதரவின்றி தவிக்கும் நந்து(பார்த்திபன்) வளர்ந்து பத்து வயதில் போலீஸ்காரால் வன்புணர்வுக்கு ஆளாகிறார். அதன் பின் திருநங்கை எடுத்து வளர்க்க, கஞ்சா தொழிலில் தள்ளப்படுகிறார். பின்னர் சினேகா குமாரை காதலிக்க தொடங்க, அந்த காதலும் பணத்தாசையால் நிராசையாகிவிடுகிறது. அங்கிருந்து ஆந்திரா செல்லும் நந்து கோயிலில் ப்ரிகிடா சகாவை பார்த்து காதலில் விழுந்து சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டு தமிழகத்திற்கு வருகிறார். இஸ்லாமியரின் உதவியால் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்ய வட்டிக்கு பணம் கடன் வாங்குகிறார். அந்த கடனை அடைக்க முடியாமல் நந்து தவிக்க மனைவி ப்ரிகிடாவை பிடித்து வைத்து நிர்வாணப்படுத்தி அடாவடியாக கந்து வட்டிக்காரர்கள் பணத்தை வாங்கிச் செல்கின்றனர். இந்த அவமானத்தை தாங்கமுடியாமல் கர்ப்பிணியாக இருக்கும் ப்ரிகிடா தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மனமுடையும் நந்து சாமியார் ரோபோ சங்கர் ஆசிரமத்தில் சேர்ந்து சேவை செய்கிறார். அங்கே சாமியாரினியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார், சாமியார் ரோபோ சங்கர் மீது வீண் பழி சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி சொத்து, பணம் என்று சுகபோக வாழ்க்கை வாழ்கிறார். இதைக் கண்டு வெறுப்படையும் நந்து சாமியாரினியை தீர்த்துக் கட்டிவிட்டு, நகைகளையும், பணத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகிறார். அந்த பணத்தை வைத்து கந்து வட்டிக்கு கடன் கொடுக்கும் ஃபினான்சியராக படிப்படியாக வளர்ந்து பெரிய பணக்காரனாகிறார். தன்னிடம் கடன் கொடுக்க முடியாமல் தவிக்கும் ஏழை பிராமணரின் மகள் சாய் பிரியங்கா ரூத்தை மிரட்டி திருமணம் செய்து கொள்கிறார். பெண் குழந்தை பிறக்க அதன் மேல் அளவு கடந்த பாசத்தை பொழிந்து வளர்கிறார். மகளின் பள்ளித் தோழனின் தந்தை நந்துவிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் குடும்பத்தில் விரிசல் உண்டாகி மனைவி மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டே சென்று விடுகிறார். மகளும் நந்துவை வெறுக்க தொடங்க, போலீஸ் கைது செய்ய வந்து கொண்டிருக்க, அங்கிருந்து தப்பி செல்கிறார். அதன் பின் நந்து என்ன முடிவெடித்தார்? தன் மனைவி, மகளுடன் மீண்டும் சேர்த்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
நந்துவாக பார்த்திபன் ஐம்பது வயது தோற்றத்தில் தனக்கு வாழ்க்கையில் நடந்த அநியாயங்களையும், அநீதியையும் விவரிக்கும் கதாபாத்திரத்தில் உயிருக்கு பயந்து ஒடிக் கொண்டிருக்கும் போதே அத்தனை சம்பவங்களையும் நம் கண் முன்னே காட்சி படத்திய விதத்தில் தனித்து நிற்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தான் அனுபவித்த வேதனைகளின் வெளிப்பாட்டை தயவு தாட்சயமின்றி வக்கிரமாக சிலர் மீது தீர்த்துக் கொள்வது ஆகட்டும், ஆபாச வார்த்தைகளால் திட்டுவது ஆகட்டும் என்று தன்னுடைய இமேஜை பற்றி கவலைப்படாமல் தைரியமாக துணிச்சலாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார். ஆதரவின்றி இருக்கும் குழந்தைகள் இத்தகைய சூழலில் வளர்ந்து தீய பழக்கங்கள் ஏற்பட்டு வாழ்க்கையில் தடம் மாறி தடுமாறி செல்வதை தன் கதாபாத்திரத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளார். அனைத்தையும் மறந்து வாழ நினைத்தாலும் பின் தொடரும் அவரின் இருண்ட பக்கங்களின் நிழலான மனசாட்சியிடமிருந்து தப்பிக்க முடியாமல் தடுமாறி நிலை குலைந்து விழும் காட்சியில் ஸ்தம்பிக்க வைத்து விடுகிறார். சிங்கிங் ஷாட்டில் அத்தனை முகபாவனைகள், வசனங்கள் மட்டுமின்றி பிரம்மாண்ட செட்டின் காட்சியமைப்புகள், உடையலங்காரங்கள், ஒப்பனைகள், பாடல்கள், நடனங்கள் என்று பார்த்து பார்த்து தன் முழு திறமையையும், உழைப்பையும் கலந்து ஒருங்கிணைத்து தங்கச் சிலை போல் செதுக்கி நடித்தும் இயக்கியும் அசத்தியுள்ளார் பார்த்திபன்.
நந்துவின் காதலியாக சிநேகா குமாரி, முதல் மனைவியாக பிரிகிடா சகா தேர்ந்த நடிப்பு ஆந்திப் பெண்ணாக கொஞ்சிப் பேசும் சுந்திரத் தெலுங்கில் அப்பாவித்தனமும், அழகு தேவதையாக வந்து மறைந்து போகிறார். இரண்டாவது மனைவியாக சாய் பிரியங்கா ரூத் என மூவர் இந்த படத்தின் நாயகிகளாக வந்து மனதில் இடம் பிடித்துள்ளனர்.
ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோ{வா ஆகியோர் பார்த்திபனின் இளமை கால பரிணாமங்கள்.
வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் போலி சாமியார்களாக பிரதிபலிக்கின்றனர். மற்றும் பலர் பெயர் தெரியாத முகங்கள் கதாபாத்திரங்களாக படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அயராத அர்ப்பணிப்பை கொடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள்.
‘காயம், ஸ்ரேயா கோஷலின் ‘மாயவா தூயவா”, ‘பாவம் செய்யாதிரு மனமே’ படம் ஆரம்பத்தில் தெறிக்கும் இசை வெறொரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்வது போல் காந்த இசையால் கட்டி போட்டு விடுகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னணி இசை படத்தில் அதிர வைத்துள்ளது.
கிம்பள் சாதனம் ஒளிப்பதிவு கலைஞர் – ஏ.கே.ஆகாஷ், காமிரா போகஸ் புல்லர்ஸ் – சங்கரன் டிசோசா, ராஜேஷ் இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சிங்கிள் ஷாட்டில் படத்தை எடுத்து தன் அளப்பரிய உழைப்பை கொடுத்து சாதிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன். இவரின் விடாமுயற்சி தான் படத்தின் ப்ளஸ்சாக இருந்து வழி நடத்தி சென்றுள்ளது என்றால் மிகையாகாது.
64 ஏக்கரில் 50 வகையான செட்களை ஒரே இடத்தில் அமைத்து அதை எத்தகைய தடைகளும் இல்லாமல் படத்தின் காட்சிகளை மாற்றி அமைத்து சிங்கிள் ஷாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைத்திருக்கும் தேர்ந்த மதிநுட்பதுடன் செய்துள்ளார் கலை இயக்குனர் விஜய் முருகன்.
இவர்களின் அளப்பறிய கடினமாக பணியை மேகிங் விடியோவாக அரை மணி நேரம் காட்டியிருக்கும் விதத்தை பார்க்கும் போது இது சாத்தியமா? நம்ப முடியாத சாதனையை நிகழ்த்தியிருப்பதற்கு பாராட்டுவதற்கு வார்த்தைகள் போதாது. எடிட்டட் வர்ஷனில் சில காட்சிகள், வசனங்களை மியூட் செய்திருப்பார்கள் என்று நம்புவோமாக.
மொத்தத்தில் பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் – அகிரா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இரவின் நிழல் படத்தின் இடியாப்ப சிக்கல் கதையை சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக வெளிவர உதவிய கைதேர்ந்த நடிகர்களுடன் புதுமுக நடிகர்கள், மதிநுட்பம் வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள், இணை இயக்குனர்கள், இவர்களுடன் சேர்த்து 365 பேரின் தன்னலமற்ற விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை சாதுர்யம், சாமர்த்தியத்தோடு சாதிக்க செய்து சாதனை படைத்த இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் அத்துனை நல்லுளங்களுக்கும் பாராட்டுக்களுடன் மென் மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது கலைப்பூங்கா.