அவள் பெயர் ரஜ்னி சினிமா விமர்சனம் : அவள் பெயர் ரஜ்னி ஒரு சமூக செய்தியுடன், திகில் கோணத்தில் மர்மத்தை தக்க வைத்து த்ரில்லிங் அனுபவத்தை கொடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது | ரேட்டிங்: 3/5

0
389

அவள் பெயர் ரஜ்னி சினிமா விமர்சனம் : அவள் பெயர் ரஜ்னி ஒரு சமூக செய்தியுடன், திகில் கோணத்தில் மர்மத்தை தக்க வைத்து த்ரில்லிங் அனுபவத்தை கொடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது | ரேட்டிங்: 3/5

நவரசா ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ரீஜித் கே.எஸ் மற்றும் பிளெஸ்ஸி ஸ்ரீஜித் தயாரித்திருக்கும் அவள் பெயர் ரஜ்னி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வினில் ஸ்கரியா வர்கீஸ்.

இதில் நவீனாக காளிதாஸ் ஜெயராம், கௌரியாக நமீதா பிரமோத், ஷில்பாவாக ரெபா மோனிகா ஜான், திருநங்கையாக பிரியங்கா சாய், பால் செல்வராஜாக அஸ்வின் குமார், அபிஜித்தாக சைஜு குருப், செல்வமாக கருணாகரன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: ஆர்.ஆர். விஷ்ணு, இசை: 4 மியூசிக், எடிட்டர்: தீபு ஜோசப், வசனங்கள்: வின்சென்ட் வடக்கன், டேவிட் கே ராஜன், கலை இயக்குனர்: ஆஷிக் எஸ்ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்,ஆடை வடிவமைப்பாளர்: தன்யா பாலகிருஷ்ணன், ஸ்டண்ட் நடன இயக்குனர்: ஆக்ஷன் நூர், கே கணேஷ் குமார், அஷ்ரஃப் குருக்கள், இணை தயாரிப்பாளர்: அபிஜித் எஸ் நாயர், தயாரிப்பு நிர்வாகி: ஷமீஜ் கொயிலாண்டி, சக்திவேல், மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)

மகிழ்ச்சியான தம்பதிகளான அபிஜித் (சைஜு குருப்) மற்றும் கௌரி (நமீதா பிரமோத்) ஆகியோர் நகரின் புறநகரில்; தங்கியிருக்கும் அபிஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரைச் சென்று பார்த்துவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்புவதில் படம் தொடங்குகிறது. வழியில் எரிபொருள் தீர்ந்து கார் நின்றுவிட கௌரியை காரில் விட்டுவிட்டு, அபிஜித் வாகனத்திற்கு எரிபொருளைப் பெறுவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு புறப்பட்டு செல்கிறார். அதன் பிறகு காரை பூட்டி விட்டு உள்ளே கௌரி தூங்க சிறிது நேரம் கழித்து, காரின் மேலிருந்து சில சத்தங்களால் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்க்க அபிஜித் அவர்களின் காரின் கூரையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்க்கிறாள். இந்த சம்பவத்தை கௌரி மற்றும் சிலர் பார்க்கிறார்கள். ஒரு சிலர் கொலையை செய்தது ஒரு பெண் என்றும், சிலர் பேய் என்று கூறுகிறார்கள். அதிர்ச்சியடையும் கௌரி சுயநினைவை இழந்து கண்விழித்தவுடன் மருத்துவமனையில் இருப்பதைக் காண்கிறாள். அவள் மீது பாசமுடன் இருக்கும் சகோதரர் நவீன் (காளிதாஸ் ஜெயராம்), தனது மைத்துனரின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். நவீன் (காளிதாஸ் ஜெயராம்) மற்றும் இன்ஸ்பெக்டர் பால் (அஷ்வின் குமார்) இருவரும் இணைந்து கொலையாளியை தேடும்; வேட்டையில் இறங்குகிறார்கள். ஒரு விஷயம் மற்றொன்றுக்கு அழைத்துச் செல்கிறது, அபிஜீத் இறப்பதற்கு முன், தன்னை யாரோ பின் தொடர்வதை உணர்ந்ததாக சொன்னதை நவீன் கண்டுபிடிக்கிறார்.அபிஜித்தை யார், ஏன் பின்தொடர்கிறார்கள்? அவள் பெயர் ரஜ்னியிடம் பதில்களைக் கண்டுபிடிக்க நவீன் புறப்படுகிறார். இதுவே படத்தின் முடிவு.

காளிதாஸ் வழக்கம் போல் இல்லாமல் இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதும் தன் தோளில் சுமந்து நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், அவரது சகோதரியின் உயிரைக் காப்பாற்றவும், மாமாவைக் கொன்றவரைக் கண்டுபிடிக்கவும் அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் படத்தின் திருப்பங்களுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.

பிரியங்கா சாய் படத்தில் திருநங்கையாக உணர்ச்சி குவியலான அவருடைய மிரட்டலான நடிப்பும் அபாரம்.

இன்ஸ்பெக்டர் பால் செல்வராஜாக அஷ்வின் குமார் கம்பீரம் மற்றும் மிடுக்குடன் வலம் வந்து கொலையாளியை கண்டுபிடித்து வேட்டையாடி திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

நமிதா பிரமோத், ரெபா மோனிகா, சைஜு குருப், கருணாகரன், ரமேஷ் கண்ணா, மறைந்த ‘பூ’ ராமு உட்பட அனைத்து முன்னணி நடிகர்களும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி, படத்தை ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக மாற்றுயிருக்கிறார்கள்.

ஆர்.ஆர்.விஷ்ணுவின் ஒளியமைப்பும் காட்சியமைப்பும் படத்திற்கு ஒரு உன்னதமான நேர்த்தியையும் அமைப்பையும் தந்து தேடுதல் வேட்டையின் போது கொலைக்கான காரணத்தையும், கொலையாளி யார் என்பதையும் விறுவிறுப்பாக இரவில் நடப்பதை தன் காட்சிக் கோணங்களால் விவரித்திருக்கும் விதம் அருமை.

படத்தொகுப்பாளர் தீபு ஜோசப்பின் எடிட்டிங் விறுவிறுப்புடன் நகர்த்திய விதமும், அதன் பிறகு பல மர்ம முடிச்சுகளின் விவரங்களை உறுதிப்படுத்த தவறிவிட்டதைப்போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

‘4 மியூசிக்’ இசை மற்றும் பின்னணி இசையில் த்ரில்லருக்கான பயத்தையும், மிரட்டலையும் சரியாக பதிவு செய்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.

இயக்குனர் வினில் ஸ்காரியா வர்கீஸின் படத்தில் ஆர்வத்தைத் தூண்டி, கவனத்தை ஈர்த்து பெரும்பாலும், காட்சிப்படுத்திய விதம் புதியதாக இருப்பதால் படம் உங்களை ஆர்வமாக வைத்திருக்கிறது.இருப்பினும், இறுதியில், குற்றத்திற்கு மேற்கோள் காட்டப்பட்ட முக்கிய காரணம் திரைப்படத்தின் கதைக்களத்தில் பல முடிச்சுகளுடன் படம் முடிவடைகிறது, அவை தொடர்ந்து அவிழ்க்கப்படாமல், பார்வையாளர்களின் மனதில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமல் பழி வாங்கும் கதைக்களமாக தந்துள்ளார் இயக்குனர் வினில் ஸ்காரியா வர்கீஸ். இரண்டாவது பாதியில், அவர் மற்றொரு லெவல் திரைக்கதையில் மற்ற நடிகர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றால் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எளிமையான பழிவாங்கும் கதையாக இருந்தாலும் இயக்குனர் ஆர்வத்தையும் சில விஷயங்களையும் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் தொடக்கத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரித்து காட்டியது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் கடைசியில் அவர்களுக்கு மரியாதை கொடுத்துள்ளார்.சில இடங்களில் திருநங்கைகளுக்கான தேவையை தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிக்கு இன்னும் கொஞ்சம் பஞ்ச் கொடுத்திருக்கலாம். ஒரு கண்ணியமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் வினில் ஸ்காரியா வர்கீஸ்.

மொத்தத்தில் நவரசா ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் அவள் பெயர் ரஜ்னி ஒரு சமூக செய்தியுடன், திகில் கோணத்தில் மர்மத்தை தக்க வைத்து த்ரில்லிங் அனுபவத்தை கொடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.