அன்னபூரணி விமர்சனம் : அன்னபூரணி சவால்கள் நிறைந்த சமையல் உலகில் அன்னபூரணியின் புத்துணர்ச்சியூட்டும் விண்மீன் எழுச்சி | ரேட்டிங்: 3.5/5
ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோர் தயாரித்திருக்கும் அன்னபூரணி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நிலேஷ் கிருஷ்ணா.
இப்படத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- தமன் – எஸ் இசை, சத்யன் சூரியன் – ஒளிப்பதிவு, பிரவீன் ஆண்டனி – படத்தொகுப்பு, ஜி துரைராஜ் – கலை, அருள் சக்தி முருகன்- வசனம், பிரசாந்த் எஸ் – கூடுதல் திரைக்கதை, சஞ்சய் ராகவன் – கிரியேட்டிவ் தயாரிப்பாளர், லிண்டா அலெக்சாண்டர் – நிர்வாகத் தயாரிப்பாளர், வெங்கி – பப்ளிசிட்டி டிசைனர் மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் – மக்கள் தொடர்பு.
ஸ்ரீPரங்கத்தில் ஆச்சாரமான ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்னபூரணி (நயன்தாரா).பட்டதாரியான அவரது தந்தை ரங்கராஜன் (அச்யுத் குமார்) ரயில்வே வேலையை விட்டு விட்டு ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம் தயாரித்து தரும் வேலை செய்கிறார். சிறு வயதிலிருந்தே அன்னபூரணி மேம்பட்ட சுவை உணரும் தன்மை உடையவர் என்பதால் பிரபலமான பெரிய செஃப் ஆக மாற விரும்புகிறாள். இந்தியாவின் புகழ்பெற்ற சமையல்காரர்களில் ஒருவரான ஆனந்த் சுந்தர்ராஜனிடமிருந்து (சத்யராஜ்) உத்வேகம் பெற்று அவரை ரோல் மாடலாக கருதுகிறார். கல்லூரியில் எம்பிஏ படிக்கிறேன் என்று பொய் சொல்லி கேட்டரிங் படிப்பை தன் தந்தைக்கு தெரியாமல் படிக்கிறார். பெரிய செஃப் ஆக வேண்டுமென்றால் சைவம், அசைவம் இரண்டையும் சமைக்க வேண்டும் என்பதால் முதலில் தான் வளர்க்கப்பட்ட விதத்தை நினைத்து தயங்கினாலும், தன் நண்பர் ஜெய்யின் ஆலோசனைப்படி அசைவ உணவை சமைக்க கற்றுக்கொள்கிறார். ஒரு நாள் தந்தைக்கு இந்த உண்மை தெரிய வர படிப்பை நிறுத்தச்சொல்லி திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது. அதன் பின் தன் வாழ்நாள் கனவை நனவாக்க, வீட்டை விட்டு வெளியேறி தன் நண்பர்கள் உதவியுடன் வேலை தேடுகிறார். பெரிய ஹோட்டலில் ஆனந்த் சுந்தர்ராஜனின் தயவில் அன்னபூரணி, கார்ப்பரேட் செஃப் ஆக வேண்டும் என்ற தனது கனவை நோக்கிச் செல்கிறார். அதற்கு தடையாக ஆனந்த் சுந்தர்ராஜனின் மகன் கார்த்திக் குமார் இருக்கிறார். தன் நோக்கத்தில் அன்னபூரணி வெற்றி பெற்றாரா? ஒரு சிறந்த செஃப் ஆவதற்கான தேடலில் அன்னபூரணி; சந்தித்த சிரமங்கள் என்ன? இந்தியாவின் சிறந்த செஃப் ஆக தேர்வு பெற்றாரா? தந்தைக்கு பெருமை சேர்த்தாரா? இந்தக் கேள்விகளுக்கு இரண்டரை மணி நேரத்தில் இறுதியில் எதிர்பார்த்த பதில் கிடைக்கும்.
நயன்தாரா தன் பங்கை சரியாக செய்து படத்தை தன் தோளில் சுமந்து சிறப்பாக வெளிப்படுத்துகிறார். அன்னபூரணியாக தன் தந்தை மீது அபரித அன்பு இருந்தாலும், தன் கொள்கையை விட்டு கொடுக்காத பிடிவாத குணத்துடன் உறுதியுடன் போராடுவதும், தன்னை எதிரியாக கருதும் கார்த்திக்குமாரை எதிர்த்து பல சவால்களை சமாளித்து வெற்றி பெறும் இறுதிக் காட்சியில் தந்தைக்கு மரியாதை கொடுத்து நன்றிக்கடன் செலுத்தும் இடத்தில் அசத்தியுள்ளார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த படத்தில் ஜெய்யின் பங்களிப்பு சிறு துளி என்றாலும் பெரு வெள்ளமாக உதவுகிறது. நண்பர் ஃபர்ஹானாக நடிக்கும் ஜெய், அன்னபூரணியின் சியர் லீடராகவும், ஊன்றுகோளாகவும் இருந்து உதவி செய்யும் கேரக்டர் காதலனா? இல்லை நண்பரா? என்ற குழப்பத்தில் செல்கிறது.
சத்யராஜ், செஃப் ஆனந்த், அன்னபூரணியின் முன்மாதிரியாகவும்,அவருக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் தூண் போல் துணை நிற்கிறார்.
தந்தையின் பால்ய நண்பர் கே.எஸ்.ரவிக்குமார், ஜெய் நண்பராக ரெடின் கிங்ஸ்லி, கண்டிப்பான தந்தையாக அச்யுத் குமார், திருப்புமுனை கொடுக்கும் பாட்டியாக முற்போக்கு எண்ணங்கள் நிறைந்த குமாரி சச்சு, தாயாக ரேணுகா, வில்லத்தனத்துடன் கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.
படத்தில் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. ஸ்ரீரங்கத்து ஸ்பெஷல் உணவு என்றாலும் சரி, பிரெஞ்ச் உணவு வகைகளாக இருந்தாலும் சரி,; பிரியாணியாக இருந்தாலும் சரி, தயாராகும் விதத்திலும் அதை காண்பித்த விதத்திலும் ரிச் லுக்கை கையாண்டு, போட்டி நடைபெறும் இடத்தை படத்தின் தரத்தை காட்சி கோணங்களில் உயர்த்தி பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.
தமனின் பின்னணி இசை படத்தின் உயர்வையும் தாழ்வையும் சமமாக பூர்த்திசெய்து, ஒரு இன்னிசை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
பிரவீன் ஆண்டனி – படத்தொகுப்பு, ஜி துரைராஜ் – கலை, அருள் சக்தி முருகன்- வசனம் என்று படத்தில் இவர்களின் பங்கு நேர்த்தியாக உள்ளது.
உணவு சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் ஒரு பெண் சிறந்த செஃப்பாக எத்தகைய போராட்டங்களை கடந்து தன் இலக்கை அடைகிறாள் என்பதை நயன்தாராவை நாயகியாக வைத்து எதிர்பார்த்த சம்பவங்களை இணைத்து இயக்கியுள்ளார் நிலேஷ் கிருஷ்ணா.முதல் பாதி செஃப்பாக முயல்வதும் இரண்டாம் பாதி மாஸ்டர் செஃப்பாக கிரீடம் சூட முற்படுவது என்று படம் சில இடங்களில் தெளிவின்மை குறைவாகவும், என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைப் பற்றி இன்னும் உறுதியாகவும் சொல்லாமல், ஊகிக்கக்கூடிய காட்சிகளுடன் புதுமையாக எதுவும் சொல்லவில்லை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா. பெண்கள் செஃப் துறையில் நுழைய தயங்குவதை சுட்டிக்காட்டியிருப்பதும், மதத்திற்கும், உணவுக்கும் சம்பந்தமில்லை, சாதி;க்க தடையில்லை என்பதை சில காட்சிகளில் புரிய வைத்திருக்கிறார் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா.
மொத்தத்தில் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோர் தயாரித்திருக்கும் அன்னபூரணி சவால்கள் நிறைந்த சமையல் உலகில் அன்னபூரணியின் புத்துணர்ச்சியூட்டும் விண்மீன் எழுச்சி.