Director duo JD-Jerry’s new creation: An innovative book on ad films

0
83

இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெரியின் புதிய படைப்பு: விளம்பரப் படங்கள் குறித்த புதுமைப் புத்தகம்

துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வித்தைகளை கற்றுத்தரும் ‘விளம்பரப் படம்- வேற லெவல்’

ஜேடி-ஜெரி என்று பிரபலமாக அறியப்படும் இயக்குநர் இரட்டையர்களான ஜோசப் டி சாமி மற்றும் ஜெரால்டு ஆரோக்கியம், உல்லாசம் மற்றும் விசில் ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தனர். தற்போது இவர்கள் பிரபல தொழிலதிபர் ‘லெஜெண்ட்’ சரவணன் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகின்றனர்.

விளம்பரப் படங்கள் இயக்குவதில் முன்னணியில் உள்ள ஜேடி-ஜெரி, பல தலைசிறந்த நிறுவனங்களின் விளம்பரங்களை வெற்றிகரமாக உருவாக்கி, விளம்பர உலகில் தனி முத்திரையை பதித்துள்ளனர்.

இத்துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இவர்களது அனுபவம் உதவ வேண்டும் எனும் நோக்கத்தோடு ‘விளம்பரப் படம்- வேற லெவல்’ எனும் புத்தகத்தை ஜேடி-ஜெரி எழுதியுள்ளனர். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தார் இப்புத்தகத்தை வெளியிடுகின்றனர்.

“500-க்கும் மேற்பட்ட விளம்பரங்கள், கவிதை, சிறுகதை, தொலைக்காட்சித் தொடர்கள், டாக்குமெண்டரிகள், திரைப்படங்கள், அனிமேஷன் படங்கள், நிகழ்ச்சி மேலாண்மை என்று கடந்த 30 வருடங்களாக மீடியாவின் பல்வேறு துறைகளில் பயணம் மேற்கொண்டு வருகிறோம்,” என உற்சாகத்துடன் கூறுகின்றனர் ஜேடி-ஜெரி.

தங்களது புத்தகத்தை குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இரட்டையர், “எங்களது 52 விளம்பர படங்கள் பற்றி, அவை உருவானவிதம், மற்றும் தொழில்நுட்பம் பற்றி இந்த புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறோம். முன்னுரையை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, எழுத்தாளர் பட்டுக்கோட்டைப் பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், மற்றும் லயோலா கல்லூரி ஊடகத்துறைத் தலைவர் சுரேஷ் பால் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். மீடியாவில் பயணிப்பவர்கள், மீடியா நோக்கி வரும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இது மிகப்பயனுள்ள நூல் என்று அனைவரும் கருதுகின்றனர்,” என்றனர்.

அதோடு, வெற்றி பெற்ற தொழில் அதிபர்கள் பற்றியும், தங்களது நிறுவனத்தை விளம்பரபடுத்த விரும்பும் புதிய தொழில் முனைவோருக்கு, விளம்பரங்களின் வீச்சை பற்றியும், இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்துகிறது.

மேலும், புதுமையான முயற்சியாக, ஒவ்வொரு விளம்பரத்தைப் பற்றிய விளக்கத்தோடு அதன் கியூ ஆர் கோடும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கைபேசியில் அதை ஸ்கேன் செய்து உடனே அந்த விளம்பரத்தைப் பார்க்க முடியும். அந்த வகையில் தமிழ் விளம்பரத் துறை குறித்த புத்தகங்களில் முதல் முயற்சி இது என்றும் சொல்லலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெரியின் எழுதியுள்ள ‘விளம்பரப் படம்- வேற லெவல்’ புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கும்.