83 திரை விமர்சனம்: 83 மலரும் நினைவுகளாக இன்றைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெய் சிலிர்க்கும் சமர்ப்பணம்

0
292

83 திரை விமர்சனம்: 83 மலரும் நினைவுகளாக இன்றைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெய் சிலிர்க்கும் சமர்ப்பணம்

1983 ஆம் ஆண்டு கேப்டன் கபில்தேவ் (ரன்வீர் சிங்) தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக இங்கிலாந்து செல்கிறது. ஆரம்பம் முதலே அனைத்து உள்நாட்டு,வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும், விளையாட்டு மைதானத்திலும்  இந்திய அணியின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தி கேவலமாக பேசுகின்றனர். அந்தளவுக்கு இந்திய அணி என்றாலே அனைவரும் இளக்காரமாக பார்க்க கேப்டன் கபில் தேவ் மட்டும் தன் அணியின் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார். இந்திய அணியின் மேனேஜர் அரை இறுதி ஆட்டத்துக்கு முன்பாகவே ரிட்டர்ன் டிக்கெட் கூட போட்டு விடுகிறார். அங்கு, முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறிவிடும் என்று பலரும் கூறி வரும் நிலையில், முதல் இரண்டு மேட்ச்களில் வெற்றிபெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது இந்திய அணி.  அதன் பின் எதிர்பாராதவிதமாக இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் செல்கிறது. அனைத்து அவநம்பிக்கைகளையும் உடைத்து தொடர்ந்து ஒவ்வொரு ஆட்டமாக முன்னேறி இறுதி ஆட்டத்தில் வென்று உலகக் கோப்பையை இந்திய அணி எப்படி வென்றது என்பதே 83 படத்தின் கதை.

ரன்வீர் சிங் கபில்தேவ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி மெதுவாக தயங்கி பேசும் பாணியை, தரையில் நட்ராஜ் ஷாட், பந்துவீச்சு மற்றும் அவரது உடல் மொழி, முகபாவனைகள் ஆகியவற்றைக் கச்சிதமாக செய்வதை பார்க்கும்போது ஆச்சர்யம் கலந்த பிரம்மை ஏற்படுகிறது. ஆனால் விளையாட்டிற்காக அவர் என்ன நினைக்கிறார், நம்புகிறார், உணர்கிறார் என்பதைப் பற்றியும் அவமானப்படும் போது அமைதியாக இருந்து சாதித்து காட்டி அவர் பேசுவதை கேட்கும்போது கபில்தேவ்வாகவே வாழ்ந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த வீரராக கபில்தேவ் செயல்பட்டு 1983 உலகக் கோப்பையை வென்று உயர்த்திப் பிடிக்கும் படத்தை பார்க்கும் அனைவரும் ஒவ்வொரு முறையும் ஏன் உணர்ச்சிவசப்படுகிறோம் என்பது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு புரியும்.

ஸ்ரீகாந்தாக ஜீவா படபடவென பேசும் கேரக்டரை, கண்சிமிட்டும் மேனரசத்தையும் நகைச்சுவையோடு பிரதிபலிக்கிறார்.மற்றும் மற்ற கிரிக்கெட் வீரர்களாக நடித்திருக்கும் சாகிப் சலீம், தாஹிர் ராஜ் பாசின், அம்மி விர்க், ஹார்டி சந்து, ஜதின் சர்னா, பங்கஜ் திரிபாதி மற்றும் போமன் இரானி ஆகியோர் இந்தப் படத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றனர். தீபிகா படுகோனே கபில்தேவ்வின் மனைவியாக சிறிய வேடம் என்றாலும் சிறப்பாக செய்திருக்கிறார்.

1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – மேற்கிந்திய அணியை வென்று பட்டத்தை கைப்பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை நினைவுகளை படமாக இயக்கி இருக்கிறார் கபீர் கான். அசிம் மிஷ்ராவின் ஒளிப்பதிவும், ஜூலியஸ் பக்கியத்தின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. பிரிதம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களைப் போலவே இருப்பவர்களை தேர்ந்தெடுத்து படத்தில் அவர்களின் மேனரிசத்தை சரியாக செய்திருப்பதற்காகவே பாராட்டலாம். 1983 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோக்கள் தொழில்நுட்பம் இந்தியாவில் வளர்ச்சியடையாத நாட்களில் வசதிகள் இல்லாததால் பலர் பார்த்திருக்க மாட்டார்கள், ரேடியோவில் மட்டுமே கேட்டிருப்பார்கள், அவர்களுக்கும் இன்றைய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரிந்திராத உண்மைகள், அவமானங்களை மீறி தேசப்பற்றுடன் இந்தப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதற்கு இயக்குனர் கபிர்கானுக்கு நன்றி. அதுமட்டுமில்லாமல் அந்த காட்சிகளை இன்று நிஜமான கிரிக்கெட் வீரர்கள் பார்த்து ரசிப்பது போன்று அமைத்து அவர்களின் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருப்பதும் அருமை.

மொத்தத்தில் 83 மலரும் நினைவுகளாக இன்றைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெய் சிலிர்க்கும் சமர்ப்பணம்.