திரைப்படங்களில் இனி நோ சென்சார் கட்…! அமீரக அரசு ஊடகத்துறை அதிரடி அறிவிப்பு!!

0
139
3D rendering background is perfect for any type of news or information presentation. The background features a stylish and clean layout

திரைப்படங்களில் இனி நோ சென்சார் கட்…!
அமீரக அரசு ஊடகத்துறை அதிரடி அறிவிப்பு!!

அபுதாபி, அமீரகத்தில் இனி சர்வதேச அளவில் திரையிடப்படும் வயது வந்தோருக்கான திரைப்படங்களில் காட்சிகள் நீக்கம் செய்யப்படமாட்டாது என்றும், பெரியவர்களுக்கான குறைந்தப்பட்ச வயது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அமீரக அரசு ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்து நாடுகளில் உள்ளது போல் அமீரகத்திலும் திரைப்படங்களை பார்க்கும் பார்வையாளர்களின் வயது வரம்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில் பெரியவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களை காண சிறுவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதற்கு ஏற்கனவே வயது அடிப்படையில் பெரியவர்கள் பார்க்கும் தணிக்கை செய்யப்படாத திரைப்படங்களை காண குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வயதுவந்தோருக்கான திரைப்படங்களை காண குறைந்தப்பட்சம் 21 வயது இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் வெளியிடப்படும் திரைப்பட காட்சிகளில் இனி மாற்றங்கள் செய்யப்படாது அல்லது தணிக்கையில் காட்சிகள் நீக்கப்படாது.

பொதுவாக சர்வதேச திரைப்பட வெளியீடுகளில் அமீரகத்தில் அனுமதி அளிக்கப்பட்டாலும் வயது வந்தோருக்கான கருப்பொருள் கொண்ட திரைப்படங்களில் காட்சிகள் வெட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நடைமுறை தற்போது மாற்றப்படுகிறது. எனவே திரைப்படங்கள் அதன் அசல் சர்வதேச பதிப்பில் திருத்தப்படாமல் திரையிடப்படும்.

இந்த திரையரங்குகளில் 21 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் திரைப்படங்களை அவர்கள் காண தங்கள் வயதிற்கான அடையாள ஆவணம் அல்லது சான்றிதழை காட்டுவது அவசியமாகும். வீடுகள் மற்றும் விமானங்களில் காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களில் மட்டும் வயது வந்தோருக்கான காட்சிகளில் மாற்றம் அல்லது நீக்கம் செய்யப்படும். விரைவில் இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.