விஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை

0
484

விஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சக்ரா’. விஷால் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்துள்ளார்.

இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 19-ம் தேதி சக்ரா திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் தயாரிப்பாளர் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், நடிகர் விஷால் தயாரிப்பில் உருவாகி வரும் 19-ம் தேதி வெளியாக உள்ள சக்ரா திரைப்படத்தின் கதையை அந்தப் படத்தின் இயக்குநர் ஆனந்தன் ஏற்கனவே தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டதாக குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் சக்ரா படத்தின் கதையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துவிட்டு தற்போது விஷால் தயாரிப்பில் அவர் நடிப்பில் தயாரித்துள்ளது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன்சுப்ரமணியன் , தங்கள் தரப்பிடம் காப்புரிமை உள்ளதால் சகரா படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த மனு குறித்து நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி19-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.