வாலி படத்தின் இந்தி ரீமேக்… எஸ்.ஜே.சூர்யா வழக்கு?
வாலி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முயற்சி செய்து வருகிறார் போனி கபூர். அவருக்கு எதிராக நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இயக்குனராக எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் வாலி. அஜித் இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தன்னுடைய குஷி படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்த எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தை ரீமேக் செய்யவில்லை. படத்தின் கதை இப்போதும் எந்த மொழி ரசிகரும் ரசிக்கக் கூடியது.
வாலியை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியிடமிருந்து அதன் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி அதனை இந்தியில் தயாரிக்க திட்டமிட்டார் போனி கபூர். அது தன்னுடைய கதை, தனது அனுமதியில்லாமல் வாலியை ரீமேக் செய்யக் கூடாது என எஸ்.ஜே.சூர்யா தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போனி கபூர் பட வேலைகளை தொடங்க அனுமதியளித்தது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டுள்ளார்.
ஒரு கதையானது அதை எழுதிய இயக்குனருக்கு சொந்தமா இல்லை படமாக எடுத்த தயாரிப்பாளருக்கு சொந்தமா என்ற அக்கப்போர் அடிக்கடி நடக்கிறது. அந்நியன் இந்தி ரீமேக்கிலும் கூட இதுதான் நடந்தது. இப்போது வாலி படத்துக்கு எஸ்.ஜே.சூர்யா வாலியை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் மேல்முறையீடு செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.