வாக்களிக்க சைக்கிளில் வந்து ஸ்கூட்டரில் திரும்பிய விஜய் – காரணம் என்ன தெரியுமா?

0
289

வாக்களிக்க சைக்கிளில் வந்து ஸ்கூட்டரில் திரும்பிய விஜய் – காரணம் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய், சைக்கிளில் புறப்பட்டார். ரசிகர்கள் கூடி விடக் கூடாது என்பதற்காக, அவருடன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலர் இருசக்கர வாகனங்களில் நெருக்கமாக வந்தனர்.

தனது வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தார். முகக்கவசம் அணிந்து சைக்கிள் ஓட்டியபடி அங்கு வந்து ரசிகர்களை ஆச்சயத்தில் ஆழ்த்தினார். அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் போலீஸ் அமைத்திருந்த தடுப்புகளையும் மீறி அருகே குழுமினர். பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தி, நடிகர் விஜயை உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பிறகு தனது வாக்கை நடிகர் விஜய் பதிவு செய்தார்.

நடிகர் விஜய் வாக்குச் செலுத்திவிட்டு திரும்பியபோது ரசிகர்கள் அதிகளவில் முண்டியடித்ததால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வாக்களித்த பிறகு, மீண்டும் தனது வீட்டுக்கு சைக்கிளில் செல்ல நடிகர் விஜய் சென்றார். ஆனால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்தபடி நடிகர் விஜய் வீடு திரும்பினார். ரசிகர்கள் முண்டியடித்தபடி செல்பி எடுப்பதற்காக ஓடி வந்ததால், கடும் சிரமத்துக்கு இடையே தடுமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை அந்த நிர்வாகி ஓட்டினார்

நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், அதுகுறித்து பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றிருக்கலாம் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ கூறும் போது நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் என கூறினார்.