‘சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு’ ; சிம்புவை மேடையில் வெட்கப்பட வைத்த பாரதிராஜா
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’.
கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், சித்ரா லட்சுமணன், எஸ்.ஆர்.பிரபு, கே.ராஜன், தனஞ்செயன், விநியோகஸ்தர் சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, “சிம்புவை பற்றி எல்லோரும் பலவிதமாக சொல்வார்கள்.. ஆனால் அவரை பற்றி சொல்லப்பட்டது, கேள்விப்பட்டது எல்லாமே பொய். அவரிடம் சில சேஷ்டைகள் உண்டு.. ஆனால் அவை எல்லாமே எனக்கு பிடிக்கும்.. இந்த வயதில் அப்படி சேஷ்டைகளுடன் இருந்தால் தான் அவர் சிம்பு. நான் படமெடுத்த காலத்தையும் இப்போது வெங்கட் பிரபு படமெடுக்கும் விதத்தையும் பார்த்து பிரமித்து போய் நிற்கிறேன். அதேசமயம், வெங்கட்பிரபு நீதான் பெரியவனா..? உனக்கு போட்டியாக நானும் மீண்டும் படமெடுப்பேன்” என ஜாலியாக சவால் விடுத்தார்.