ஏலே விமர்சனம்

0
292

ஏலே விமர்சனம்

ஒய் நாட் ஸ்டியோஸ் எஸ்.சசிகாந்த் வழங்கும் ஏலே திரைப்படத்தை எழுதி இயக்கிருக்கிறார் ஹலிதா ஷமீம்.

இதில் சமுத்திரகனி, மணிகண்டன், மதுமதி, சனா உதயகுமார், கைலாஷ், அகல்யா, தமிழரசன், சுதர்சன் காந்தி, கணேஷ், சரண்யா ரவிச்சந்திரன், ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-தேனி ஈஸ்வர், கலை-வினோத்குமார், இசை-கேபர் வாசுகி, அருள்தேவ், எடிட்டிங்-ரெய்மெண்ட் டெரிக் க்ரஸ்டா, ஹலிதா ஷமீம், சண்டை-தினேஷ் சுப்பராயன், க்ரியேடிவ் தயாரிப்பு-புஷ்கர்-காயத்ரி, துணை தயாரிப்பு-சக்கரவர்த்தி ராமசந்திரா, பிஆர்ஒ-சுரேஷ்சந்திரா.

மனைவியை இழந்த முத்துக்குட்டி(சமுத்திரகனி) ஐஸ் விற்று மகன் மணிகண்டன், மகள் சனாவை பாசத்துடன் வளர்கிறார். ஊர்மக்களிடம் பல தில்லாலங்கடி வேலைகள் செய்து ஏமாற்றி பணம் பறிப்பது, மனம் போன போக்கில் மகிழ்ச்சியாக வாழ்வது என்று முத்துக்குட்டி செய்யும் அலப்பரைகளால் சிறு வயதிலிருந்தே பல நேரங்களில் அவமானப்படும் மகன் மணிகண்டன் அப்பாவை வெறுப்புடனே பார்த்து வளர்கிறான். பின்னர் சென்னையில் வேலை செய்யும் மணிகண்டன் தந்தை இறந்து விட்டார் என்ற சேதி கேட்டு கிராமத்திற்கு வந்தாலும் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் வருத்தப்படாமல் இருக்கிறார். சாவு வீட்டில் ஊர் மக்கள் சூழ்ந்திருக்க, சமுத்திரகனியின் உடல் காணாமல் போய் விடுகிறது. தன் நண்பர்களுடன் சேர்ந்து தேடும் மணிகண்டனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன? கை கூடாத காதல் வெற்றி பெற்றதா? தந்தை மீதிருந்த வெறுப்பு மறைந்ததா? நடந்த சம்பவங்கள் என்ன? என்பதே இறுதி வரை மர்ம முடிச்சுடன் கூடிய க்ளைமேக்ஸ்.

முத்துக்குட்டியாக வாழ்ந்திருக்கிறார் சமுத்திரகனி. எத்தனை பரிணாமங்கள், எத்தனை சேட்டைகள் அத்தனையும்  செய்து விட்டு மகிழ்ச்சியாக சுற்றித் திரியும் கதாபாத்திரம். மகன் பார்வையில் கெட்டவராக, ஊர் மக்கள் பார்வையில் கவலையில்லா மனிதராக, மகள் பார்வையில் பாசமிகு தந்தையாக, குழந்தைகள் பார்வையில் ஐஸ் மாமாவாக வலம் வந்து செய்யும் சில்மிஷங்;கள் அனைவரையும் ரசிக்க வைப்பதோடு கை தட்டலும் பெறுகிறது.முதலில் சமுத்திரகனி ஏமாற்றுப் பேர்வழியாக தெரிந்தாலும் படம் செல்ல செல்ல அவரின் வெகுளித்தனமாக பேச்சும், உள்குத்தும் நம்மை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது. இரட்டை வேடம் படத்திற்கு ப்ளஸ் மட்டுமல்ல படத்தின் ஒட்டத்திற்கும் பொருந்தி வருகிறது. எப்பொழுதும்  பொங்கி எழும் வசனங்கள், அறிவுரைகள், கருத்துக்கள் என்ற அக்மார்க் முத்திரை சமுத்திரகனி இந்த படத்திற்கு பிறகு நகைச்சுவை கலந்த வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுப்பார் என்று நம்புவோமாக.ஹாட்ஸ் ஆப் சமுத்திரகனி.

மணிகண்டன் யதார்த்தமான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துவதோடு, இறுக்கமான முகத்திற்குள் இருக்கும் வலிகள், வேதனைகள், தோல்விகள் என்று சிறப்பாக வெளிப்படுத்தி தன் தந்தையின் மீதான கண்ணோட்டம் படிப்படியாக திசை திரும்பி தந்தை மீது ரசிக்க வைக்கும் அளவிற்கு செல்லும் விதம் அற்புதம். வெல்டன்.
நாச்சியாவாக மதுமதி கிராமத்து பெண்ணாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அக்காவாக வரும் சனா உதயகுமார் நல்ல தேர்வு. சிறுவயது பார்த்தி கைலாஷ், சிறுவயது மீனா அகல்யா, நண்பர்களாக வரும் தமிழசரன், சுதர்சன் காந்தி, கணேஷ் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன், ஆனந்த் இவர்களுடன் ஊர் மக்கள், குழந்தைகள் என்று ரசிகர்களை ரசிக்க வைக்க ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் அத்தனையும் கண்டெடுத்த முத்துக்கள்.

தேனி ஈஷ்வரின் எழில்மிகு கிராமத்து மண் வாசனையுடன் மணக்கிறது நம்மை ரசிக்க வைக்கிறது.

கேபர் வாசுகி, அருள்தேவ் இசை படத்தின்; கதைக்களத்துடன் ஒன்றி ஆச்சர்யப்பட வைக்கிறது.

எழுத்து, இயக்கம்-ஹலிதா ஷமீம். சாவு வீட்டில் சாவு மேளத்துடன் தொடங்கும் படம் பிணத்தை எரிக்கும் வரை என்ன நடந்தது? என்பதைச் சொல்லும் சுவாரஸ்யமான பதிவு.முதலில் அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள், மகன் தந்தையின் இருவருக்குள்ளும் சிறு வயது முதல் இளவயது வரை நடக்கும் சுவாரஸ்யமான ரசிக்க வைக்கும் பிளாஷ்பேக் காட்சிகள், மணி-நாச்சியாவின் இயல்பான காதல் காட்சிகள், சமுத்திரகனியை  திசை திருப்பும் சகோதரர், ஏமாற்ற நினைத்து மாட்டிக் கொள்ளும் விஷயங்கள், தந்தையை சரியாக துப்பறிந்து கண்டுபிடிக்கும் மகன் என்று திரைக்கதைக்குள் இத்தனை கதையா என்ற ஆச்சர்யங்கள் நிறைந்த ஏலே படத்தின் இயக்கத்திற்கு காரணம் ஹலிதா ஷமீம். அருமையான கதாபாத்திர தேர்வு, தேர்ந்த நடிகர்கள், ரசிக்க வைக்கும் திருப்புமுனைகள், சஸ்பென்ஸ் கலந்த க்ளைமேக்ஸ் என்று இயக்குனரின் சுவாரஸ்யம் நிறைந்த கைவண்ணம் பளிச்சிடுகிறது. சிறந்த படத்தை தந்த இயக்குனர் ஹலிதா ஷமீம் விருதுகள் பல பெற வாழ்த்துக்கள் மேடம்.

மொத்தத்தில் ஏலே வெற்றியில் அடிச்சுக்க ஆளே இல்லே.