உலகம் முழுவதும் 90 கோடி வசூலை வாரிக் குவித்த டாக்டர் படம் : தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஸ்டார் சிவகார்த்திகேயன்!

0
194

உலகம் முழுவதும் 90 கோடி வசூலை வாரிக் குவித்த டாக்டர் படம் : தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஸ்டார் சிவகார்த்திகேயன்!

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 90 கோடிகளை வசூலித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் அறிவிப்பாளராக இருந்து பாண்டிராஜின் மெரினா, ஐஸ்வர்யா தனுஷின் 3 படங்களில் நடிக்கையில் பத்தோடு பதினொன்றாகவே இருந்தார் சிவகார்த்திகேயன்.

2013 இல் வெளியான எதிர்நீச்சல் எதிர்பாராத வெற்றியை பெற்றது.

எனினும், அதே வருடத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படமே சிவகார்த்திகேயனை ஸ்டாராக்கியது.

அடுத்தடுத்து வெளியான மான் கராத்தே, காக்கிச் சட்டை படங்கள் சிவகார்த்திகேயனை 35 கோடிகள் பிசினஸ் உள்ள நடிகராக உயர்த்தியது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் கடன்கள் காரணமாக தள்ளிப்போன ரஜினி முருகன் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை சம்பாதித்துக் கொடுத்து சிவகார்த்திகேயனின் இடத்தை உறுதி செய்தது.

தனக்கென ஒரு மார்க்கெட் உருவானதும் தனது நண்பர் டி.ராஜாவை தயாரிப்பாராக்கி ரெமோ படத்தை எடுத்தார் சிவகார்த்திகேயன். தமிழக திரையரங்கில் முதல்முறையாக 50 கோடிகளைத் தாண்டிய சிவகார்த்திகேயன் படம் என்ற பெருமை அதற்கு கிடைத்தது.

அதையடுத்து தனி ஒருவன் என்ற மெகாஹிட்டை தந்த மோகன்ராஜாவுடன் கைகோர்த்தார். வேலைக்காரன் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை எனினும் சிவகார்த்திகேயனின் சந்தை மதிப்பை அதிகரித்தது. இதுவும் 50 கோடிகளை தமிழகத்தில் தாண்டியது.

தனக்கு இரு ஹிட்கள் தந்த பொன்ராமை வைத்து சீமராஜா படத்தை எடுத்தார். பிளாஷ்பேக் சரித்திரக் காட்சிகளுக்கு அளவுக்கதிகமாக செலவளித்தது சறுக்கலாக அமைந்தது. படம் 50 கோடிகளை தமிழகத்தில் தொடவில்லை.

கடன் காரணமாக நண்பரின் நிறுவனத்தை தவிர்த்து வெளி தயாரிப்புகளில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பித்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த நம்ம வீட்டுப்பிள்ளை மற்றொரு வெற்றிப் படமாக அமைந்தது. தமிழகத்தில் 50 கோடிகளை கடந்தது.

சூப்பர் ஹீரோவாக நடித்த பி.எஸ்.மித்ரனின் ஹீரோ சரியாகப் போகவில்லை.

அதேநேரம், கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் வெளியான டாக்டர் பட்டையை கிளப்புகிறது. தமிழகத்தில் 60 கோடிகளைத் தாண்டிய இந்தப் படம் உலக அளவில் சுமார் 90 கோடிகளை வசூலித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஸ்டாராகியிருப்பதை இந்த வெற்றி உறுதி செய்துள்ளது.