ஹிட்டான ‘ஊ சொல்றியா…’- அடுத்தப் பாடலுக்கு ரெடியான சமந்தா.. யார் படத்தில் தெரியுமா?

0
60

ஹிட்டான ‘ஊ சொல்றியா…’- அடுத்தப் பாடலுக்கு ரெடியான சமந்தா.. யார் படத்தில் தெரியுமா?

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா..’ பாடல் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா படம் ஒன்றில் குத்து பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி, தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. டப்பிங் செய்யப்பட்டு இந்தியில் வெளியிடப்பட்டநிலையில், அங்கேயும் வசூலை வாரி குவித்தது ‘புஷ்பா’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் பிரபல நடிகையான சமந்தா, முதன்முதலாக குத்து சாங்கான ‘ஊ சொல்றியா…’ என்ற பாடலில் நடனமாடியிருந்தார். தேவிஸ்ரீபிரசாத் இசையில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

பாடல் வெளியானதும் ஒரு பக்கம் பல சர்ச்சைகள் எழுந்தாலும், மறுபக்கம் அப்பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அப்பாடலுக்காகவே பலர் மீண்டும் மீண்டும் அப்படத்தை பார்த்தனர் என்றுகூட சொல்லலாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தது ‘ஊ சொல்றியா…’ பாடல். யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அப்பாடலுக்காக சமந்தா ஐந்து கோடிவரை சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும், பேன் இந்தியா படமான ‘லிகர்’ படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தாவை நடனமாடச்சொல்லி படக்குழு அணுகியதாக தெரிகிறது. இதற்கு சமந்தாவும் அந்தப்படத்தில் ஆட ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா..’ பாடலை போன்றே இப்பாடலும் உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படும் நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ள சமந்தா ஹாலிவுட்டிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.