வசூலில் முதல் நாளிலேயே சாதனை செய்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் – வெளியான தகவல்
ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.257 கோடி வசூலாகி சாதனை செய்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமௌலி, ‘பாகுபலி’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார்.
1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்.
இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கொரேனா காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையும் பெற்றாலும், படத்தின் பிரம்மாண்டத்தை பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் முதல்நாள் வசூல்குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்நாளில் மட்டும், மொத்தம் ரூ. 250 கோடி வசூல் செய்துள்ளது.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் இந்தப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.120.19 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் ரூ.25.14 கோடி, கர்நாடகாவில் ரூ.16.48 கோடி, கேரளாவில் ரூ.4.36 கோடி, தமிழகத்தில் ரூ.12.73 கோடி, வெளிநாடு உள்பட மற்ற இடங்களில் ரூ.75 கோடி வசூலித்துள்ளது.
மேலும் ‘ஆர்.ஆர்.ஆர் ‘ படம் வெளியீட்டுக்கு முன்பே 750 கோடி வசூல் செய்து ‘பாகுபலி 2’ படத்தை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.