பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

0
209

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திரையிசை பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறன் கொண்ட மாணிக்க விநாயகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர். அப்போது முதல் அவர் பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. தனித்துவமிக்க காந்தக் குரலால் ரசிகர்களை ஈர்க்கும் வல்லமை படைத்தவர். சுமார் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

நடிகர் தனுஷின் ‘திருடா திருடி’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமனார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பிரபல பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனான பாடகர் மாணிக்க விநாயகம், ஏராளமான பக்திப் பாடல்களை பாடி இசையமைத்துள்ளார். அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார்.

முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துன்பமானாலும், துள்ளலானாலும், தனது குரல் வளத்தால் அவ்வுணர்வுகளை துள்ளியமாகக் கடத்தி விருந்தளித்தவர். பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்தவர் வழுவூர் மாணிக்க விநாயகம் என்று தெரிவித்துள்ளார்.