நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன் – கவுதம் வாசுதேவ் மேனன்!

0
143

நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன் – கவுதம் வாசுதேவ் மேனன்!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

பாரதிராஜா சாருடன் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன்.. நடிகை மஹானா சஞ்சீவி..!

நடிகை மஹானா சஞ்சீவி பேசும்போது,

பள்ளிக்கூடம் படிக்கும்போது தங்கர் பச்சான் சாரின் பள்ளிக்கூடம் படம் பார்த்தேன். இந்த படத்திற்கு என்னை அழைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீ தமிழ் பெண் என்பதால் தான் உன்னை இந்த படத்திற்கு அழைத்தேன் என்று கூறினார், அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய இயக்குநர்களுடன் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன். ஜி.வி.பிரகாஷ் சார் இசையில், சைந்தவி மேடம் பாடியிருக்கிறார். வைரமுத்து சார் வரிகளில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது.

என்னுடைய கதாபாத்திரம் மீனாகுமாரி, என்னுடைய வயதிற்கு மீறியதாக இருக்கும். இப்படத்தில் நடித்திருக்கிறேன் என்பதை விட வாழ்ந்திருக்கிறேன் என்று தான் கூறவேண்டும். அதேபோல், கிளிசரீன் உபயோகிக்காமல் நடித்தேன். அதற்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று கேட்டார், நான் இரண்டு நிமிடங்கள் எடுத்து கதாபாத்திரத்தை நினைத்து ஒவ்வொரு காட்சியிலும் கிளிசரீன் போடாமல் தான் நடித்திருக்கிறேன். மேக்கப் இல்லாமல் என்னை அழகாக காட்டியிருப்பதற்கு நன்றி.

பாரதிராஜா சாருடன் நடித்திருப்பதில் பெருமையடைகிறேன்.

‘எல்லைக் கடந்த வியப்பு’ என்று என்னை குறிப்பட்டதற்கு நன்றி, தங்கர் பச்சான் சார்..!  நடிகை அதிதி பாலன் !!

கதாநாயகி அதிதி பாலன் பேசும்போது,

பல இயக்குநர்கள் ஜாம்பான்களுடன் நடித்திருக்கிறேன். அதிகமான காட்சிகள் பாரதிராஜா சாருடன் தான். இப்படம் எனக்கு கற்றுக் கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. பாரதிராஜா சாரின் ஒவ்வொரு வசனம், அவர் எப்படி உச்சரிக்கிறார் என்று ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டே இருப்பேன்.

இப்படத்திற்காக தங்கர் பச்சான் சாரின் அலுவலகத்திற்கு அழைத்து கதை கூறினார். எனக்கு பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனாலும், மற்றவர்கள் அவர் மிகவும் கோபப்படக் கூடியவர் என்று கூற கேள்விப்பட்டிருந்தேன். ஆகையால், சிறிது பயத்துடனே தான் சென்றேன். ஆனால், அவர் என்னை திட்டவில்லை, அதிகமாக பாராட்டியது என்னைத்தான்.

எல்லைக் கடந்த வியப்பு என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார். உங்களுடன் பணியாற்றிதை நான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன், மிகவும் நன்றி என்றார்.

ஒவ்வொரு இசையும் தியானம் தான்..! இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்..!!

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது,

ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு படமும் கற்பது தான். அதேபோல், ஒவ்வொரு இசையும் தியானம் தான். இசையைப் பொறுத்தவரை அந்தந்த தருணத்தில் உருவாவது தான்.

இந்த படம் இரண்டு தந்தைகளைப் பற்றிய கதை.

காக்கா முட்டை, விசாரணை, வெயில் அதேபோல், கலைநயமிக்க இசையமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த படம் தான் கருமேகங்கள் கலைகின்றன. ஆகையால் தான் சம்பளத்தைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. கையிலே ஆகாசம் பாடலை இறுதியாகத்தான் சுதாவிடம் கூறினேன். அதேபோல், இயக்குநர்கள் அந்த நம்பிக்கையை கொடுக்கும்போது நிறைய படைப்பு உருவாகும். அதுபோல், தங்கர் பச்சான் சாரும் என்மீது நம்பிக்கை வைத்தார். தங்கர் பச்சான் சார், பாலா சார் போன்றோர்கள் உணர்வுபூர்வமாகத்தான் இசை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்த டியூன் கிடைத்து விட்டால் திருப்தியாக இருக்கும். எனக்கு எப்போதுமே மக்களின் உணர்வுகளை மையப்படுத்தப்படும் படம் தான் மிகவும் பிடிக்கும். இப்படம் வியாபார ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

இசையமைப்பாளராக என்னை உணர்வுகளோடு அழைத்து செல்ல வேண்டும். மேலும், ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்து தான் இசையமைத்து வருகிறேன்.

எம்.எஸ்.வி, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் போன்ற அனைவரின் இசையைக் கேட்டு அதிலிருந்து தான் என்னுடைய இசையை அமைத்து வருகிறேன்.. என்றார்.

அதன் பிறகு..
கருமேகங்கள் கலைகின்றன படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை மேடையில் அவரே இசையமைத்து பாடினார். எம்.எஸ்.வி. சாருக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன் என்றார்.

இயக்குநர் வெற்றி மாறனுக்கு, எள்ளு வய பூக்கலையே….
இயக்குநர் செல்வராகவனுக்கு, உனக்கென மட்டும் வாழும் இதயமடி….
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு, கண்ணாளனே எனது கண்ணை…..
இசைஞானி இளையராஜாவிற்கு, நினைவோ ஒரு பறவை…..
நடிகர் விக்ரமிற்கு, தெய்வத்திருமகள் படத்தில் வரும் பின்னணி இசை….
இயக்குநர் தங்கர் பச்சானுக்கு, ஒளியிலே தெரிவது தேவதையா….

மேற்கண்டவர்களுக்கு என்ன பாடலை அர்ப்பணிப்பீர்கள் என்ற கேள்விக்கு, இந்த பாடலை அர்பணிப்பேன் என்று பாடி, இசையமைத்தார்.

தங்கர் பச்சான் ‘இசை இளவரசன்’ என்று என்னை குறிப்பிட்டிருக்கிறார், அவருக்கு நன்றி என்றார்.

ஜி.வி.பிரகாசுக்கு அவர் உருவப்படம் பொறித்த புகைப்படம் ஒன்றை பரிசாக அளித்து விட்டு தங்கர் பச்சான் பேசியதாவது..
இசை இல்லையென்றால் இன்று பாதி பேருக்கு பைத்தியம் பிடித்திருக்கும். இசையமைப்பாளர்கள் எல்லோரும் வைத்தியம் பார்ப்பவர்கள். மிக கடினமான சூழலை நான் சுலபமாக கூறிவிட்டேன். ஆனால், இந்த தலைமுறையும் ரசிக்கும்படி ஜி.வி.இசையமைத்திருக்கிறார். அவருக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை, ஆனால் நிச்சயம் ஏதாவது செய்வேன். இது வெறும் இசை வெளியிடும் நிகழ்ச்சி மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கு மிகப் பெரிய சொத்தை விட்டு போகிறோம் என்றார்.

நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன்.. – கவுதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கவுதம் மேனன் பேசும்போது,

தங்கர் பச்சான் கேட்டு என்னால் நோ என்று சொல்ல முடியாது. பாரதிராஜா சார் தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார். நடிப்பதை விட இயக்குவது தான் சுலபம். இந்த படத்தில் நிறைய காட்சிகளில் புதுவிதமாக நடித்திருக்கிறேன். நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன். ஆனால், யோகிபாபுவுடன் காட்சிகள் இல்லாததில் வருத்தமாக இருந்தது. அடுத்த படத்தில் அவருடன் நடிப்பது குறித்து பேசியிருக்கிறேன்.

இந்த படத்தில் அனைவருக்குமே ஒரு தேடல் இருக்கும். பாரதிராஜா சாருக்கு ஒரு தேடல் இருக்கும், அதிதி பாலன் ஒரு விஷயமாக தேடிக் கொண்டிருப்பார். நான் ஒன்றை தேடிக் கொண்டிருப்பேன். பாரதிராஜா சாருக்கு மகனாக நடித்திருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் பாரதிராஜா சார் என்னை அடிக்க வேண்டும், முதலில் தயங்கினார், பின்பு அடித்துவிட்டார். எப்போதோ வாங்க வேண்டியதை இப்போது வாங்கிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்.

தங்கர் பச்சானுடன் நிறைய பேசுவோம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் தான் இப்படத்தில் நான் இருக்கிறேன்.

தங்கர் பச்சான் என்னுள் நிறைந்தவன் என்று என்னைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அது ஏன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும். அதேபோல், அவரும் எனக்குள் நிறைந்திருப்பார். ஜி.வி. நீங்கள் நன்றாக பணியாற்றியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை, வாழ்த்துகள் என்றார்.

இந்த படத்தை தயாரித்ததில் எனக்கு பெரு மகிழ்ச்சி.. தயாரிப்பாளர் துரை வீரசக்தி ..!

தயாரிப்பாளர் துரை வீரசக்தி பேசும்போது,

தங்கர் பச்சானுடன், நண்பராக, அண்ணனாக பல ஆண்டுகளாக இருக்கிறோம். ஒருமுறை இந்த கதையை தங்கர் பச்சான் கூறினார். #OMG படம் முடிந்ததும், இந்த படத்தை தயாரிக்கிறேன் என்றேன். இந்த படத்தை தயாரிக்க யாரும் முன்வர மாட்டார்கள். நன்றாக யோசித்துக் கொள் என்றார். இந்த படம் அவருக்கு மறுபிறவி என்று தான் சொல்ல வேண்டும். நான் மறுபடியும் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். அவருடைய பயணம் மீண்டும் தொடரும் என்று நம்புகிறேன். இந்த படத்தை தயாரித்தேன் என்ற பெருமை எனக்கு இருக்கும்.

இந்த படத்திற்கு இவ்வளவு தான் செலவு செய்ய முடியும் என்று திட்டமாக கூறினேன். ஆனால், ஒவ்வொரு ஜாம்பான்களும் வரவர பயம் கூடிக்கொண்டே வந்தது. அதேபோல், ஜி.வி.க்கு என்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும், இதுவரை 100 ரூபாய் கூட கொடுத்ததில்லை. இந்த படத்திற்கு வரும் லாபத்தில் அவருடைய பங்கை அவர் வீட்டிற்கே சென்று கொடுப்பேன்.

பாலுமகேந்திராவின் மாணவராக இருந்த சிவபிரகாசம் இயக்கத்தில் பேரன்பும், பெருங்கோபமும் என்ற படம் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிக் கொண்டிருக்கிறது. என்னுடைய பணத்தை இயக்குநர் அவருடைய பணமாக நினைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு நிச்சயம் வாய்ப்புக் கொடுப்பேன்.

இதற்கிடையில், தயாரிப்பாளர் வீரசக்தியின் தாயார் அவருக்கு பிடித்த சிலையை பரிசளித்து வாழ்த்தினார். (இன்று (07.05.2023) தயாரிப்பாளர் வீரசக்தி தாயாரின் பிறந்தநாள்) ரூ.300 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து இந்தளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் தனி ஆளாக இருந்து என்னை வளர்த்த என் அன்னை தான் காரணம். இன்றோடு அவருக்கு 74 வயது முடிந்து 75 தொடங்குகிறது. இன்றும் அவர் மாடியில் வடகம் போட்டு வியாபாரம் செய்து வருகிறார். அது, வெளிநாடு வரை வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

5 ஸ்டார் கதிரேசன் பேசும்போது,

தங்கர் பச்சானைப் பற்றி கூறுவதற்கு ஒரு நாள் போதாது. அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்கள் மக்களோடு சேர்ந்து எடுத்திருக்கிறார். மெலோடி பாடல்கள் என்றால் ஜி.வி.பிரகாஷ் தவிர யாராலும் கொடுக்க முடியாது. யோகிபாபு பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். புது இயக்குநர்களுக்கு யோகிபாபுவும், டெல்லி கணேஷ் சாரும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள் என்றார்.

ஜி.வி.பிரகாஷ் எனது கணவர் என்பதை விட நல்ல நண்பர்..- பாடகி சைந்தவி!

பாடகர், இசையாமைப்பாளர், நடிகர் மூன்றுக்கும் எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, 100க்கு 100 மதிப்பெண் கொடுப்பேன் என்றார். அவரைப் போன்ற உறுதுணையான கணவர் கிடைப்பது கடினம். மேலும், அவர் எனக்கு கணவரை காட்டிலும் எப்போதும் நண்பர் தான் என்றார். பின்பு, இந்த படத்திற்காக அவர் பாடிய பாடல்களில் ஒன்றைப் பாடினார்.

அவர் பாடி முடித்ததும், ஜி.வி.பிரகாஷ் மேடைக்கு வந்து…

அழகி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒளியிலே பாடலை லைட் இல்லாமல் எடுத்திருப்பார்கள். சொல்ல மறந்த கதை படம் வந்த போது யார் இந்த இயக்குநர் என்று கேட்டு அறிந்து கொண்டேன்.

கள்வன் என்ற ஒரு படத்திற்காக நானும் பாரதிராஜா சாரும் சத்தியமங்கலம் பகுதியில் படப்பிடிப்பு நடித்துக் கொண்டிருக்கும்போது, இந்த படத்தின் கதையை தங்கர் பச்சான் கூறினார். ஏற்கனவே, பாரதிராஜா சார் மற்றும் யோகிபாபு இக் கதையை சொல்லி இருந்தார்கள்..பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். அதேபோல், கமர்ஷியல் படங்கள் மட்டும் அல்லாமல், இதுபோன்ற உணர்வுபூர்வமாகவும் இசையமைக்க வேண்டும் என்று எப்போதுமே நினைப்பேன்..என்றார்.

பார்த்து விட்டு வெளியே வந்தவுடன்.. இன்னும் சில காலம் என் பெற்றோருடன் நேரம் செலவழித்திருக்கலாம் என்று தோன்றியது – படத்தொகுப்பாளர் ஆண்டனி!!

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது,

இந்த படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பார்த்து விட்டு வெளியே வந்தவுடன்..
இன்னும் சில காலம் என் பெற்றோருடன் நேரம் செலவழித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால், வாழ்க்கை, வேலை என்று வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஆகையால், நேரம் செலவழிக்க இயலவில்லை. கமர்சியல் படங்களைவிட இப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் இதயத்தை தொட்டு விட்டது என்றார்.

நான் நடித்தால், ரஜினி நடித்த ‘பரட்டை’ கதாத்திரத்தில் தான் நடிப்பேன்..
நடிகர் யோகி பாபு!!

நடிகர் யோகிபாபு பேசும்போது,

இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த வீரசக்தி மற்றும் தங்கர் பச்சான் சாருக்கு நன்றி. இப்படத்தின் கதையைக் கூறினார். இந்த கதையில் முக்கியமான பாத்திரம் குழந்தை தான். அதன்பிறகு பாரதிராஜா சார், கௌதம் மேனன் சார் என்று பலரும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைவரும் உறுதுணையாக இருந்திருக்கிறர்கள்.

தங்கர் பச்சான் எவ்வளவுதான் கோபப்பட்டாலும், அவருடைய மனைவி, ‘மாமா கோபப்படாதீர்கள்’ என்று கூறிவார். அதற்கு, இல்லைமா இவர்களுக்கு தமிழே வர மாட்டேங்குது, கோபப்பட்டால் தான் நடிகர்கள் சரியாகப் பேசுவார்கள் என்று கூறுவார் என்று நகைச்சுவையாகப் பேசினார்.

’16 வயதினிலே’ படத்தில், சப்பாணி, பரட்டை, டாக்டர் இந்த மூன்று கேரக்டரில் நீங்கள் நடித்தால் எந்த கேரக்டரில் நடிப்பீர்கள் என்று யோகி பாபுவிடம் கேட்க்கப் பட்டது. அதற்கு, டக்டர் கேரக்டர்.. மயில் வாழ்க்கையை ஏமாத்திட்டு போயிட்டான். அது வேண்டாம். எனக்கு ரஜினி நடித்த நடித்த ‘பரட்டை’ கதாபாத்திரத்தில் தான் நான் நடிக்க விரும்புவேன்.. என்றார். அப்போது அரங்கமே அதிர்ந்தது.

தங்கர் பச்சான் ‘நடிப்பு செம்மல்’ என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார், அதற்கு நன்றி என்றார்.

இதற்கிடையில் யோகிபாபுவிற்கு தங்கர் பச்சான் முந்திரி பருப்பும், பலாப்பழமும் கொடுத்துவிட்டு, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக் கூடியவர் யோகிபாபு, அவரை சரியாக கையாண்டால் மிகச் சிறந்த நடிப்பைப் பெறலாம். இதுவரை எல்லோரையும் சிரிக்க வைத்தவர் இந்த படத்தில் எல்லோரையும் அழ வைப்பார். இவர் நடிக்க ஒப்புக் கொண்ட பின்பு தான் இந்த படம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது என்பதில் சந்தேகமில்லை. மிக மிக அழுத்தமாக பாத்திரம், இதற்கு மேல் ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும். இசையோடு சேர்ந்து இவருடைய காட்சிகளைப் பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. இப்படத்தில் மூன்று விதமான இசை இருக்கிறது என்றார்.