`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போல `லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ திரைப்படம் எடுக்கணும்: அகிலேஷ் யாதவ்

0
120

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போல `லக்கிம்பூர் ஃபைல்ஸ்’ திரைப்படம் எடுக்கணும்: அகிலேஷ் யாதவ்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ எனும் திரைப்படம் எடுக்க முடியுமென்றால், ‘லக்கீம்பூர் ஃபைல்ஸ்’ திரைப்படம் எடுக்கப்பட வேண்டும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1990-ம் ஆண்டின் துவக்கத்தில், ஜம்மு – காஷ்மீரில் வாழ்ந்துவந்த இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து தப்பி, நாட்டின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

பிரபல பாலிவுட் இயக்குநரான விவேக் அக்னி ஹோத்ரி இயக்கிய இந்தப் படம், பல்வேறு சட்டப் பிரச்சனைகளை தாண்டி கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்தில், அனுபம் கெர், விவேக் அக்னி ஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பாஷா சும்ப்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு, பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேசம், கோவா, ஹரியானா, குஜராத், கர்நாடகா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் உண்மையை வெளிப்படையாக காண்பிப்பதாக பிரதமர் மோடி படக்குழுவை பாராட்டியிருந்தார். இதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி ஆகியோர், தவறாக வழி நடத்துவதாக பிரதமருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இந்த திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஜம்மு – காஷ்மீர் சம்பவம் தொடர்பாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ எனும் திரைப்படம் எடுக்க முடியுமென்றால், லக்கீம்பூர் கேரி சம்பவத்தை வைத்து ‘லக்கீம்பூர் ஃபைல்ஸ்’ திரைப்படம் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி வேளாண் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது, பா.ஜ.க. வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் மற்றும் ஒரு செய்தியாளர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ரா தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால், அகிலேஷ் யாதவ் பாஜகவை விமர்சிக்கும் வகையில் இவ்வாறு கூறியுள்ளார்.