திடீர் உடல்நலக்குறைவு; இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

0
174

திடீர் உடல்நலக்குறைவு; இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

நடிகர் மற்றும் இயக்குனரான பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமின்றி பல்வேறு ரசிகர்களால் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பாரதிராஜாவுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான மஞ்சள் காமாலை நோய் அறிகுறி தென்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் நலமாக உள்ளார். மருத்துவர்கள் பாரதிராஜாவை சில நாட்கள் வரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தெரிகிறது.

பாரதிராஜா 1977-ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த 16 வயதினிலே படம் மூலம் இயகுனராக அறிமுகமானார். கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல வெற்றி படங்களை டைரக்டு செய்துள்ளார். சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படத்தையும் இயக்கினார். இந்த படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது. 1990-களில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் பாரதிராஜவுக்கு உண்டு.