ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

0
186

ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ஃபர்ஹானா: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் கதைகளைத் தேர்வு செய்து தயாரிப்பதில் முதன்மையாக இருக்கும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். தற்போது இந்த வெற்றிப் படங்களின் வரிசையில் அடுத்த படத்தினை அறிவித்துள்ளது ட்ரீம் வாரியர் நிறுவனம்.

ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் என வித்தியாசமான கதைகளங்களை மக்கள் ரசிக்கும் வகையில் இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தப் படத்தில் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஃபர்ஹானா என இந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர், ராட்சசி உள்ளிட்ட படங்களின் மூலம் ஒளிப்பதிவில் முத்திரை பதித்த கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். தேசிய விருது வென்ற சாபு ஜோசப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.

பிரபல கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக சிவசங்கர் பணியாற்றியுள்ளார்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 7-ம் தேதி ஃபர்ஹானா படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது.