டாக்டர் விமர்சனம்

0
244

டாக்டர் விமர்சனம்

எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோடப்பாடி ஜே.ராஜேஷ் வழங்கும் டாக்டர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

இதில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், வினய்ராய், யோகிபாபு, இளவரசு, அர்ச்சனா, ஜாரா, அருண் அலெக்சாண்டர், சுனில்ரெட்டி, தீபா, ரெடின் கிங்க்ஸ்லி, சிவன் அரவிந்த், மிலிந்த் சோமன், ரகுராம், ராஜிவ் லட்சுமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-அனிருத், ஒளிப்பதிவு-விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பு-ஆர்.நிர்மல், கலை இயக்குனர்-டிஆர்கே.கிரண், ஒலி வடிவமைப்பு-சுரேன், அழகிய கூத்தன், பாடல்கள்-சிவகார்த்திகேயன், மோகன் ராஜன், நடனம்- ஜானி மாஸ்டர், ஸ்டண்ட்-அன்பறிவு, ஆடை வடிவமைப்பு-பல்லவி சிங், தயாரிப்பு மேற்பார்வை-வீர சங்கர், இணை தயாரிப்பாளர்-கலையரசு, மக்கள் தொடர்பு-யுவராஜ்.

ராணுவ டாக்டர் வருண் (சிவகார்த்திகேயன்) பத்மினி(பிரியங்கா மோகன்) இருவரும் காதலிக்க தொடங்க திருமணம் வரை சென்று இடையில் மனக்கசப்பு ஏற்பட நின்று விடுகிறது. தன் பெற்றோருடன் சென்று காரணத்தை கேட்டும் சிவகார்த்திகேயனை பத்மினி மதிக்காமல் திருமணம் தடைபட்ட காரணத்தை கூறிவிட்டு சென்று விடுகிறார்.அப்போழுது பத்மினியின் அண்ணன்(அருண் அலெக்சாண்டர்) அண்ணி (அர்ச்சனா) இவர்களின் மகள் (ஜாரா) பள்ளியில் இருந்து வரும் வழியில் காணாமல் போவதை அறிந்து அவர்களுக்கு உதவ முன் வருகிறார் வருண்.  போலீசிற்கு சென்று புகார் அளித்தும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வருணே கடத்தல் கும்பலை தேடி களமிறங்குகிறார். கடத்தல்காரர்களை தேடி செல்லும் வருண் இறுதியில் சிறுமியை எந்த இடத்தில் கண்டுபிடித்தார்? முரண்பட்ட காதலர்கள் மீண்டும் இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் ராணுவ டாக்டராக எந்தஒரு உணர்ச்சியும் காட்டாத இறுக்கமாக முகபாவத்துடன், நடை, உடை என்று விரைப்புடன் அளவான வசனம் பேசி அதிர வைக்கும் சூழ்ச்சி செய்து காதலியின் குடும்பத்தை இக்கட்டிலிருந்து காப்பாற்றும் பொறுப்புடன் இந்தப் படத்தில் நடித்திருப்பதே ஆச்சர்யம். இந்தப் படத்தில் கலகலப்பு இல்லாத புதுவித அமைதியான சிவகார்த்திகேயனை காணலாம் ரசிக்கலாம்.

பிரியங்கா மோகன் காதலி பத்மினியாக படம் முழுவதும் வந்தாலும், தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து அழகாகவும், அம்சமாகவும் அளவாக நடிப்பை தந்து செல்லம்மா பாடலில் நடனத்தில் அசத்திவிடுகிறார்.

இவர்களுடன் அண்ணன் அண்ணியாக வரும் அருண் அலெக்சாண்டர்-அர்ச்சனா, மகள் காணாமல் போன சோகத்துடன் கவலையோடு இருப்பது போன்ற தோற்றத்துடன் சிறப்பாக நடித்துள்ளனர். அர்ச்சனா ரியல் மகள் ஜாரா வந்து போகிறார்.

காமெடிக்காக யோகிபாபு, இளவரசு, சுனில் ரெட்டி, தீபா, ரெடின் கிங்க்ஸ்லி, சிவன் அரவிந்த் ஆகியோர் படத்தின் நகைச்சுவை காட்சிகளுக்கு உத்திரவாதம். மற்றும் வில்லனாக வினய் ராய், ரகுராம், ராஜிவ் லட்சுமன் மிரட்டியுள்ளனர், சிறப்பு தோற்றத்தில் மிலிந்த் சோமன் இறுதிக்காட்சிக்கு கை கொடுத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன், மோகன் ராஜன் பாடல் வரிகளில் அனிருத் இசை பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி சமமான பங்களிப்பை கொடுத்து படத்திற்கு முக்கிய தூணாக பலம் சேர்த்துள்ளார், அதிர வைத்துள்ளார்.

முதல் பாதி சென்னை இரண்டாம் பாதி கோவா காட்சிகள், இரட்டையர்களுடன் மெட்ரோ ரயில் சண்டை, கோவாவில் ரிசார்ட், கடத்தல் நெட்வொர்க், கடலின் நடுவே தனித்தீவில் பிரமாண்ட கோட்டை போன்ற வீடு, கப்பல் பயணம், செல்லம்மா பாடல் செட் என்று அனைத்து காட்சிகளையும் பார்த்து பார்த்து செதுக்கி காட்சிக்கோணங்களில் அசத்தல் ஒளிப்பதிவில் விஜய் கார்த்திக் கண்ணன் திறமை பளிச்சிடுகிறது.

படத்தொகுப்பு-ஆர்.நிர்மல், கலை இயக்குனர்-டிஆர்கே.கிரண், ஒலி வடிவமைப்பு-சுரேன், அழகிய கூத்தன்,சண்டை -அன்பறிவு ஆகியோர் படத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்துள்ளனர்.

குழந்தை கடத்தல் நெட்வொர்க்கை தேடி செல்லும் ராணுவ டாக்டர், எப்படி கடத்தல் கும்பலில் மாட்டிக் கொண்டிருக்கும் காதலியின் அண்ணன் மகளோடு சேர்த்து அத்தனை குழந்தைகளையும் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும் காயை நகர்த்தி தன் உயிரை பணயம் வைத்து மீட்கிறார் என்பதே திரைக்கதை. இதை படம் முழுவதும் சீரியஸாக கொடுக்காமல் சுவாரஸ்யமாக கொடுக்க நினைத்து நகைச்சுவையோடு காதலையும் சேர்த்து சமபந்தி உணவாக ஸ்பெஷல் விருந்தாக திருப்தியாக கொடுத்து அசத்திவிடுகிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.  கோலமாவு கோகிலா முதல் பட வெற்றியை விட இரண்டாம் படமான டாக்டர் பெரும் வெற்றியை தந்து வசூல் சாதனை செய்யும் என்பது உறுதி.

மொத்தத்தில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோடப்பாடி ஜே.ராஜேஷின் டாக்டர் கடத்தல் ஆப்ரேஷனில் கத்தியை பிடிக்காமல் புத்தி கூர்மையை பயன்படுத்தி சக்சஸ் கொடுத்து வெற்றி மகுடத்துடன் அனைத்து வயதினரையும் ஈர்த்து தியேட்டரில் கண்டு களிக்க வைக்கும்.