சித்திரைச் செவ்வானம் விமர்சனம்: பொள்ளாச்சி சம்பவங்களின் பின்னணியில் முத்திரை பதிக்கும் சித்திரைச் செவ்வானம்

0
192

சித்திரைச் செவ்வானம் விமர்சனம்: பொள்ளாச்சி சம்பவங்களின் பின்னணியில் முத்திரை பதிக்கும் சித்திரைச் செவ்வானம்

தின்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் மற்றும் அமிர்தா ஸ்டுடியோஸ் சார்பில் பி.மங்கையர்கரசி தயாரிப்பில்  வெளிவந்துள்ள சித்திரைச் செவ்வானம் ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல், வித்யா பிரதீப், சுப்பிரமணிய சிவா, நிழல்கள் ரவி, பாண்டியன், ஹரிணி சுரேஷ், க்ரிஷ் செல்வா, விதூர், ஜீவா, பிரனவ் ஆகியோர் நடித்துள்ள படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்டன்ட் சில்வா.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை:சாம் சிஎஸ், ஒளிப்பதிவு:மனோஜ் பரமஹம்சா, கே.ஜி.வெங்கடேஷ், படத்தொகுப்பு: பிரவீன் கே.எல், கதை:இயக்குனர் விஜய், கலை: ரமேஷ், உடை:கிருத்திகா, பாடல்கள் :வைரமுத்து, பிஆர்ஒ:ஏய்ம் சதீஷ்.

விவசாயி சமுத்திரகனியின் மனைவி வித்யா பிரதீப் மருத்துவ வசதி இல்லாமல் இறந்து விட, தன் இளவயது மகளை டாக்டராக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் படிக்க வைக்கிறார். பிளஸ் டூவில் முதல் மதிப்பெண் பெறும் தன் மகள் பூஜா கண்ணனை நீட் தேர்விற்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பில் சேர்த்து ஹாஸ்டலில் தங்கி படிக்க ஏற்பாடு செய்கிறார். சில நாட்களில் பூஜா கண்ணன் காணாமல் போய் விட்டதாக போலீசில் தகவல் கொடுக்கிறார் ஹாஸ்டல் வார்டன். போலீஸ் அதிகாரியான ரீமா கல்லிங்கல் பூஜாவைப் பற்றி விசாரிக்க சமுத்திரகனியின் வீட்டிற்கு செல்கிறார். சமுத்திரகனிக்கு நடந்த சம்பவங்கள் தெரிய வர அதிர்ச்சியில் பொள்ளாச்சிக்கு தன் மகளை தேடிச் செல்கிறார். போலீஸ் ஒரு பக்கம், சமுத்திரகனி இன்னொரு பக்கம் என்று பூஜாவை தேடுகின்றனர்.இறுதியில் பூஜா கிடைத்தாரா? டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு படிக்க வைக்கும் சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா? நிராசையானதா? என்பதே மீதிக்கதை.

சமுத்திரகனி மகள் மீது பாசம் கொண்ட அப்பாவி அப்பாவாக இயல்பாக நடித்துள்ளார். பாசத்திலும் சரி, பழி வாங்குவதிலும் சரி சரிசமமாக ஈடு கொடுத்துள்ளார்.

பூஜா கண்ணன் சாய் பல்லவியின் தங்கை என்று பார்த்தவுடன் கண்டுபிடிக்கும் சாயலில், முதல் படத்திலேயே தனி முத்திரை பதித்து நெகிழ வைத்து விடுகிறார்.

மிடுக்கான போலீஸ் அதிகாரியாக அசத்தும் ரீமா கல்லிங்கல், சமுத்திரகனியின் மனைவியாக வித்யா பிரதீப், சுப்பிரமணிய சிவா, நிழல்கள் ரவி, பாண்டியன், ஹரிணி சுரேஷ், க்ரிஷ் செல்வா, விதூர், ஜீவா, பிரனவ் இதில் சிலரைத்தவிர மற்றவர்கள் நம்பிக்கைக்குரிய அறிமுகபுதுமுகங்கள்.

கிராமத்துக் கதைகேற்றபடியான பின்னணி இசையை வித்தியாசப்படுத்தி கொடுக்க முயற்சித்திருக்கிறார் சாம்.சி.எஸ்., மனோஜ் பரமஹம்சா, கேஜி வெங்கடேஷ் யதார்த்த கதையுடனேயே பயணித்துள்ளார்கள்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையான சம்பவங்களை வைத்து இயக்குனர் விஜய்யின் கதைக்கு திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் ஸ்டன்ட் சில்வா. போலீஸ் தனியாக தேட, சமுத்திரகனி குற்றவாளிகளை தேடி கண்டுபிடிக்க, இன்னொருபுறம் முகமுடி அணிந்த ஒருவர் குற்றவாளிகளை நெருங்கி அடித்து கொலை செய்ய முற்படுவது என்று சஸ்பென்ஸ் கலந்து யார் தான் இதைச் செய்வது என்பதை க்ளைமேக்ஸில் சொல்லியிருக்கும் விதம் அதிர்ச்சியூட்டி இருக்கிறது. கறாரான போலீஸ் பல இடங்களில் கோட்டை விட லாஜிக்குகளை மூட்டை கட்டி போட்டு விட்டு முடிந்த வரை குற்றம் கலந்த விசாரணையோடு இயக்கியிருக்கிறார் ஸ்டன்ட் சில்வா.

மொத்தத்தில் சித்திரைச் செவ்வானம் பொள்ளாச்சி சம்பவங்களின் பின்னணியில் முத்திரை பதிக்கிறது.