பெண்களின் பாதுகாப்புக்காக நிர்பயா நிதிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3856.70 கோடிக்கு ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

0
140

பெண்களின் பாதுகாப்புக்காக நிர்பயா நிதிக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3856.70 கோடிக்கு ஒப்புதல்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

மத்திய உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா மாநிலங்களையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

* நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்கு, பல திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது. இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ரூ.3856.70 கோடி அனுமதித்துள்ளது. இதில் ரூ.2282.59 கோடி இது வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 461.16 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.276.88 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021, கொரோனா தொற்று காரணமாக, ஒத்திபோடப்பட்டது. இனி மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கும். தரவுகளை திரட்ட கைப்பேசி செயலி பயன்படுத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும்.

* ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து கணிசமாக குறைந்துள்ளன. கடந்த 2018ம் ஆண்டு 143-ஆக இருந்த ஊடுருவல் சம்பவங்கள், இந்தாண்டில் கடந்த அக்டோபர் 31ம் தேதி வரை 28 சம்பவங்களாக உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு 417 ஆக இருந்த தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, இந்தாண்டு நவம்பர் 21ம் தேதி வரை 200-ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரவாத தாக்குதலுக்கு, பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் 32 பேர் பலியாயினர். இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 19 ஆக குறைந்தது. கடந்த 12 மாதத்தில் 14 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 165 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.