கிராம உஜாலா திட்டத்தின் கீழ் சிஇஎஸ்எல் நிறுவனம் 50 லட்சம் எல்இடி பல்புகளை விநியோகித்து சாதனை படைத்துள்ளது

0
190

கிராம உஜாலா திட்டத்தின் கீழ் சிஇஎஸ்எல் நிறுவனம் 50 லட்சம் எல்இடி பல்புகளை விநியோகித்து சாதனை படைத்துள்ளது

புதுதில்லி, டிசம்பர் 28, 2021

இஇஎஸ்எல் நிறுவனத்தின் துணை அமைப்பான சிஇஎஸ்எல் நிறுவனம் கிராம உஜாலா திட்டத்தின் கீழ் 50 லட்சம் எல்இடி பல்புகளை விநியோகித்து சாதனை படைத்துள்ளது.

பீகார், உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் ஊரகப் பகுதி வீடுகளில் கிராம உஜாலா திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் தலைமையின் கீழ் கிராமப்புறங்களில் ஒளியேற்றும் சிஇஎஸ்எல் திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இம்மாதம் நடைபெற்ற தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தின்போது ஒரே நாளில் 10 லட்சம் பல்புகளை விநியோகித்து சிஇஎஸ்எல் சாதனை படைத்தது.

தற்போது பயன்பாட்டில் உள்ள பல்புகளுக்கு மாற்றாக ஒவ்வொன்றும் ரூ.10 விலையில் மூன்றாண்டு உத்தரவாதத்துடன் அதிக தரமுள்ள 7 வாட் மற்றும் 12 வாட் எல்இடி பல்புகளை சிஇஎஸ்எல் வழங்குகிறது. ஒவ்வொரு வீட்டினரும் அதிகபட்சம் 5 பல்புகளை மாற்றிக் கொள்ளலாம். இந்த விநியோகத்தின் பயனாக மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் ஊரகப் பகுதிகளில் ஆண்டொன்றுக்கு ரூ.250 கோடி சேமிக்கப்படுவதோடு 71,99,68,373.28 யூனிட் மின்சாரமும் சேமிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 2022 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.