ஒலிம்பிக், உலக ஜூனியர் போட்டியில் பங்கேற்ற தமிழக தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு
நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு பெருமை சேர்த்த தடகள வீரர்கள் அரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, ரேவதி வீரமணி, தனலக்ஷ்மி சேகர், சுபா வெங்கடேசன் மற்றும் கென்ய தலைநகர் நைரோபியில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 400 மீட்டர் கலப்பு தொடரோட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற எஸ்.பாரத், நாகர்ஜுனன் மற்றும் எம்.டொனால்ட் உள்ளிட்ட தடகள வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளருக்கு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், இதற்கு தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்கள் மற்றும் உலக ஜூனியர் போட்டியில் பதக்கம் வென்றவருக்கு தலா ரூ.1 லட்சமும், உலக ஜூனியர் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கினார். வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.