ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் முயற்சியில் அம்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு புதிதாக 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் திறந்து வைத்தார்

0
182
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் முயற்சியில் அம்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு புதிதாக 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் திறந்து வைத்தார்.
காமராஜபுரம் அம்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கு  2019 ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு  தற்காலிக வகுப்பறைகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இருப்பினும் பள்ளிக்கு 6 வகுப்பறைகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு தேவைப்பட்டது. இதனையாடுத்து  ரவுண்ட் டேபிள் இந்தியா, மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா,  பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்  பூமி பூஜையுடன் 2 வகுப்பறைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டது.
 பின்னர் மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து  மேலும் 2 வகுப்பறைகளைக் கட்டுவதற்கு நிதி திரட்டப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன.
 அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்ட 4 வகுப்பறைகளை ஆண்டுதோறும் 200 மாணவர்கள் பயன்படுத்த முடியும்.
 இந்த வகுப்பறைகளை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் திறந்து வைத்தார். மேலும் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறைகள், ஸ்மார்ட் போர்டு, மற்றும் அறிவியல் ஆய்வக உபகரணங்கள் ஆகியவை கல்வியின் தரத்தை மேம்படுத்த நன்கொடையாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன், ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் அதனுடன் இணைந்து  இந்த வகுப்பறைகளை உருவாக்கிய அனைவரின் இந்த முயற்சியை பாராட்டினார். இது வெறும் 4 வகுப்பறைகள் என எண்ணக்கூடாது எனவும், இந்த வகுப்பறைகள் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் தரமான கல்வி உறுதி அளிக்கப்படுவதோடு இது எதிர்வரும் தலைமுறைகளுக்கும் பயன்படக்கூடிய திட்டம் என்றும் அவர் தெரிவித்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்பில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அரசுப்பள்ளிகள் மீது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.