பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் 14-ந்தேதி விண்ணில் ஏவப்படுகிறது- இஸ்ரோ தகவல்
பெங்களூர்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் பயணத்தை இஸ்ரோ வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது.
பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் வருகிற 14-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது.
இதற்கான 25 மணி நேரம் மற்றும் 30 நிமிட கவுண்டவுன் பிப்ரவரி 13-ந்தேதி காலை 4.29 மணிக்கு தொடங்குகிறது. 14-ந்தேதி காலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் 1,710 கிலோ எடை உள்ள செயற்கைகோளை (இ.ஒ.எஸ்.-04) சூரிய ஒத்திசைவான துருவ சுற்றுப் பாதையில் சுற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ராக்கெட் 2 சிறிய செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது. கொலராடோவின் போல் டரில் உள்ள வளி மண்டல மற்றும் விண்வெளி ஆய்வகத்துடன் இணைந்து இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கழகத்தின் மாணவர் செயற்கைகோள், இஸ்ரோவில் இருந்து தொழில் நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டர் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.
இ.எஸ்.ஒ.-04 செயற்கைகோள் விவசாயம், வனவியல், தோட்டங்கள், மண்ணின் ஈரப்பதம், நீரியல், வெள்ளம் போன்ற அனைத்து வானிலை நிலைகளிலும் உயர்தர படங்களை வழங்க வடிவமைக்கப்பட்டு உள்ளது.