ஊரடங்கு விதிகளை மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது.. டிஜிபி அறிக்கை.. முழு விவரம்

0
242

ஊரடங்கு விதிகளை மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது.. டிஜிபி அறிக்கை.. முழு விவரம்

முழு ஊரடங்கு கால கட்டத்தில் பொது மக்களிடம் எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடக்க கூடாது என காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்பட உள்ள நிலையில், காவல்துறையினரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த காவல்துறை, தலைமை இயக்குனரும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி அறிவுரைகள் வழங்கி சுற்றறிக்கை ஒன்றை காவல்துறையினருக்கு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய பணிகள்

காவல் துணை கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு கீழ் பணிபுரியும் காவலர்கள் ஒவ்வொருவரிடமும் ஊரடங்கு கால கட்டத்தில் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

50 வயதைக் கடந்த காவலர்களுக்கும் மற்றும் நோய்களால் அவதிப்படும் காவவர்களுக்கும் ஊரடங்கு காலகட்டத்தில் இலகுவான பணி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். அவர்களை வாகன சோதனை மற்றும் பிக்கெட்டிங் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தக்கூடாது.

பெண் காவலர்களை வாகன சோதனை பணிக்கும் மற்றும் பிக்கெட்டிங் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தக் கூடாது.

காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள்

ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒவ்வொரு காவலரும் தங்கள் உடலின் பாதுகாப்புக்கு மிகுந்து முக்கியத்துவம் அளித்து தகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். கிருமி நாசினி கொண்டு தங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வதுடன், குறிப்பிட்ட இடைவெளியில் சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் பிற அரசு துறை அதிகாரிகளிடம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ளக் கூடாது.

பிற அரசுத் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறையினர், துாய்மை பணியாளர்கள் போன்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.

பொது ஒலிபெருக்கியை பயன்படுத்தி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தை கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக்கூடாது.

பொது மக்களை கண்ணியமான முறையில் அறிவுறுத்தி அவர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

ட்ரோன் கேமிராக்களை பயன்படுத்தி பொதுமக்கள் கூட்டமாக கூடுகிறார்களா என்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.

வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளை கையாளுதல்

வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிகளிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்து கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

சாலையோர வியாபாரிகளிடம் மிகுந்த மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை கடுமையான முறையில் நடத்துதல் கூடாது.

மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி கடைகள் போன்றவற்றில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.

அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான வட்டங்களை வரைவதை உறுதி செய்ய வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்தல்

ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும்.

மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகள், இதர உபகரணங்கள் ஆகியவையும் தடையின்றி எடுத்து ஆக்ஸிஜின் சிலிண்டர் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும்.

அட்டைகளுடன் இடையூறுகள் இன்றி பணிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டங்களுக்கு உள்ளேயும், இரண்டு மாவட்டங்களுக்கு இடையேயும் ஆக்சிஜன் சிலிண்டர் வாகனங்கள் தடையின்றி எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

காவல் நிலையத்தின் செயல்பாடுகள்

காவல் நிலையத்தில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.

காவல் நிலையத்தில் குற்றவாளிகள் வைக்க வேண்டிய பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முன் அனுமதியை பெற வேண்டும்.

காவல் நிலையத்தில் உள்ளே பொதுமக்கள் வருவதை அனுமதித்தல் கூடாது. சாமியானா பந்தலில் கிருமி நாசினிகள் மற்றும் முகக்கவசங்கள் தேவையான அளவில் வைத்திருத்தல் வேண்டும்.

வாகன சோதனையின் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்

ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

ஊரடங்கு விதிமுறை மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது. அப்படியே வாகனத்தினை கைப்பற்றினாலும் சில மணி நேரங்களில் அவற்றை விடுவித்தல் வேண்டும்.

இ பாஸ் வைத்து பயண அனுமதி பெற்றுள்ள வாகனங்களை அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகள் படி அனுமதித்தல் வேண்டும்.

ஊரடங்கு கால கட்டத்தில் ஒவ்வொரு காவல்துறையினரும் கண்டிப்பாக அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொண்டு, தங்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் கொண்டு, சிறப்பான முறையில் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று டிஜிபி திரிபாதி அளித்துள்ள அறிவுரைகளில் தெரிவித்துள்ளார்.