சென்னையில் அமைதி மற்றும் அஹிம்சையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகளுடன் கலந்து கொண்டார்.
பெசன்ட் நகரில் அமைதி மற்றும் அஹிம்சையை வலியுறுத்தி ஐஐஎஃப்எல் ஜீதோ அமைப்பின் பெண்கள் பிரிவு விழிப்புணர்வு அஹிம்சா மாரத்தானை ஏற்பாடு செய்திருந்தது. சுமார் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த மாரத்தானை கொடியசைத்து தொடங்கிவைத்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தனது மகள் சிஞ்சுவுடன் தானும் மாரத்தானில் கலந்து கொண்டார்.
3 பிரிவுகளில் இந்த அஹிம்சா மாரத்தான் நடத்தப்பட்டது. இதில் 10கி.மீ தூரத்திற்கான பிரிவை அமைச்சர் மனோ தங்கராஜூம், 5 கி.மீ பிரிவை கூடுதல் டிஜிபி மகேஷ் அகர்வால் மற்றும் பளு தூக்கும் வீராங்கனை ஆர்த்தி அருண் ஆகியோரும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
3.கி.மீ பிரிவு மாரத்தானை ராஜஸ்தான் மாநில சுரங்கம் மற்றும் பெட்ரொலியத்துறை அமைச்சர் ப்ரமோத் பயா ஜெயின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மட்டுமல்லாது நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 65 இடங்களில் நடைபெற்ற இந்த அஹிம்சா மாரத்தானில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர்.
10 கி.மீ பிரிவில் ராகேஷ் குமாரசாமி மற்றும் ஆஷா தீபி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
5 கி.மீ பிரிவில், சுபாஷ், கனிஷ்கா ஆகியோரும், 3 கி.மீ பிரிவில் தீபேஷ் மற்றும் விக்னேஸ்வரி ஆகியோரும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசுகள் வழங்கினார். மேலும் இந்த மாரத்தானில் கலந்து கொண்ட கென்யாவை சேர்ந்த ஐசக் கேமொய் என்பவருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
இந்த அஹிம்சா மாரத்தானை ஜீதோ பெண்கள் பிரிவின் ஷிவானி ஜெயின், சப்னா பதேலா, மற்றும் சுரபி தாகா ஆகியோர் முன்னின்று நடத்தினர். அவர்களுக்கு உறுதுணையாக அந்த அமைப்பின் ரமேஷ் துகார், நேஹால் ஷா, ஐஷ்வந்த் முனோத் மற்றும் நரேஷ் ஜெயின் ஆகியோர் செயல்பட்டு இந்த விழிப்புணர்வு மாரத்தான் சிறப்பாக நடைபெற உதவினர்.
இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அமீரக கூட்டமைப்பு உள்ளிட்ட இந்தியர்கள் வாழும் 20 நாடுகளில் இன்று ஒரே நாளில் வாழுங்கள், வாழ விடுங்கள் என்ற முழக்கத்துடன் இந்த விழிப்புணர்வு அஹிம்சா மாரத்தான் நடைபெறுகிறது.