சத்தமின்றி முத்தம் தா சினிமா விமர்சனம் : சத்தமின்றி முத்தம் தா வித்தியாசமான கோணத்தில் மர்மம் கலந்த க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

0
268

சத்தமின்றி முத்தம் தா சினிமா விமர்சனம் : சத்தமின்றி முத்தம் தா வித்தியாசமான கோணத்தில் மர்மம் கலந்த க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன்.எஸ் தயாரித்திருக்கும் சத்திமின்றி முத்தம் தா படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராஜ் தேவ்.

இதில் ஸ்ரீPகாந்த் – விக்னேஷ், பிரியங்கா திம்மேஷ் – சந்தியா, ஹரிஷ் பெராடி – இன்ஸ்பெக்டர் எட்வர்ட்,வியான் – ரகு, நிஹாரிகா – ஷீலா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : ஜுபின், பாடல்கள் : விவேகா, ஒளிப்பதிவு : யுவராஜ்.எம், படத்தொகுப்பு – ஜி.மதன், நடனம் : தினேஷ், ஸ்டண்ட் :  மிராக்கிள் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – ஆனந்த், மக்கள் தொடர்பு – மணவை புவன்

2022 ஆம் ஆண்டில் படம் தொடங்கும் முதல் காட்சியில் பெரிய ஆடம்பர பங்களாவில் வசிக்கும்; சந்தியாவை (பிரியங்கா திம்மேஷ்) மர்ம நபர் கொலை செய்ய துரத்த, வெளியே தப்பித்து ஒடி வரும் போது எதிரே வரும் காரில் அடிபட்டு கிழே விழுகிறார். சாலையில் விழுந்து கிடக்கும் சந்தியாவை காப்பாற்றி விக்னேஷ் (ஸ்ரீகாந்த்) மருத்துவமனையில் சேர்க்கிறார். உடனே சந்தியாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலையில், தான் சந்தியாவின் கணவர் ரகு என்று கூறி ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்து விட்டு காத்திருக்கிறார். இந்த விபத்தை பற்றி விசாரிக்க வரும் அபிராமபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எட்வர்ட் (ஹரிஷ் பெராடி) வருவதை பார்த்து அங்கிருந்து சென்று விடுகிறார் விக்னேஷ். இன்ஸ்பெக்டர் எட்வர்ட் விக்னேஷிற்காக காத்திருந்துவிட்டு நர்சிடம் சந்தியாவின் கணவர் வந்தால் காவல் நிலையத்திற்கு வர சொல்லிவிட்டு செல்கிறார். சந்தியா காப்பாற்றப்பட்டு விட்டாலும் தலையில் அடிபட்டதால் தன் கடந்த கால நினைவை மறந்த நிலையில் இருக்கிறார். பத்து நாட்கள் கழித்து விக்னேஷ் சந்தியாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கணவர் ரகு என்று சொல்லி அதற்கான ஆதாரங்களை காட்டி நம்ப வைக்கிறார். முதலில் தயங்கும் சந்தியா பின்னர் பள்ளி புகைப்பட ஆல்பத்தை பார்த்து விக்னேஷை நம்ப தொடங்குகிறாள். இந்நிலையில் மனைவி சந்தியாவை காணவில்லை என உண்மையான கணவர் ரகு (வியான்) போலீசில் புகார் அளிக்க இன்ஸ்பெக்டர் எட்வர்ட் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் மூலம் கடத்தியது கொலை குற்றவாளி விக்னேஷ் என்பதை கண்டுபிடிக்கிறார். ஆறு ஆண்டுகளாக கிரிமினல்களை பணத்திற்காக கொலை செய்து, ஆதாரம் இல்லாமல் தப்பித்து வந்த விக்னேஷ் போலீஸால் தேடப்பட்டு வரும் கொலைக் குற்றவாளி. இன்ஸ்பெக்டர் எட்வர்ட் விக்னேஷை தேடி கண்டுபிடிக்க முயற்சிகள் செய்கிறார். இந்நிலையில் சந்தியா அவளது பழைய கல்லூரி தோழி ஒருவரைச் சந்திக்க நேரிடுகிறது. சந்தியாவின் நிலையை பார்த்து அவளது தோழி சந்தியாவின் திருமண படங்களை அனுப்பும்போது தான் சந்தியாவுக்கு விக்னேஷ் தன் கணவர் இல்லை என்பதும், தன் உண்மையான கணவர் பெயர் ரகு என்பதும் தெரிய வந்து அதிர்ச்சியடைகிறாள். சந்தியா அங்கிருந்து தப்பித்தாரா? தன் கணவர் ரகுவிடம் சேர்ந்தாரா? விக்னேஷ் கணவன் ரகுவாக நடித்ததன் காரணம் என்ன? சந்தியாவை கொல்ல முயன்ற மர்ம நபர்கள் யார்? சந்தியாவி;ற்கு மீண்டும் நினைவுகள் திரும்பியதா? என்பதே க்ளைமேக்ஸ்.

விக்னேஷாக ஸ்ரீகாந்த் கொலை செய்து விட்டு சாமர்த்தியமாக தப்பிக்கும் கில்லாடியாக அமைதியாகவும் அதே சமயம் ஆக்ரோஷமான ஆக்ஷன் காட்சிகளில் மின்னுகிறார்.

ஞாபகமின்மையால் அவதிப்படும் சந்தியாவாக பிரியங்கா திம்மேஷ் உணர்ச்சிகள் நிறைந்த நடிப்பு படத்திற்கு பலம்.

இவர்களுடன் ஹரிஷ் பெராடி – இன்ஸ்பெக்டர் எட்வர்ட், வியான் – ரகு, நிஹாரிகா – ஷீலா ஆகிய ஒரு சில கதாபாத்திரங்கள் தான் என்றாலும் படத்தின் முக்கியத்துவத்தை அறிந்து சிறப்பாக செய்துள்ளனர்.

விவேகாவின் பாடல் வரிகளில் ஜுபினின் இசையில் ஆண்ட்ரியா பாடும் பாடல் செம்பரம்பாக்கம் ஏரி அளவு கவனிக்க வைக்கிறது.

வீட்டிற்குள்ளேயே நடக்கும் சம்பவங்கள், பாடல்கள், துரத்தல் காட்சிகள் அனைத்துமே தன் காட்சிக் கோணங்களில் அசத்தலாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் யுவராஜ்.எம்.

படத்தொகுப்பு – ஜி.மதன், ஸ்டண்ட் :  மிராக்கிள் மைக்கேல் ஆகியோரின் பங்களிப்பு ஒகே ரகம்.

கள்ளக்காதலுக்காகவும், பணத்திற்காகவும் கொல்ல துடிக்கும் கணவனிடமிருந்து காப்பாற்றும் காதலன் கதைக்களத்தில் முதல் பாதி படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தாலும் இரண்டாம் பாதி படத்தின் விறுவிறுப்பை குறைத்துள்ளது. சம்பந்தமில்லாத டைட்டில்,  இன்ஸ்பெக்டர் பேசும் ரீபிடெட் ஒன்லைன் ஆங்கில வசனங்கள், முக்கிய தருணங்களில் வரும் தேவையற்ற பாடல்கள், காட்சிகள் படத்தின் முக்கிய திருப்பங்களை பாதிக்கிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் ராஜ் தேவ் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் சலிபிரைட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன்.எஸ் தயாரித்திருக்கும் சத்தமின்றி முத்தம் தா வித்தியாசமான கோணத்தில் மர்மம் கலந்த க்ரைம் த்ரில்லர்.