75-வது சுதந்திர தின விழா : கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0
234

75-வது சுதந்திர தின விழா : கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு கோட்டைக்கு வந்தார். அவருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்-அமைச்சர், அங்கிருந்தபடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.

அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர்

விழாவில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது (5 பேர்) போன்ற பல விருதுகள் வழங்கப்படுகின்றன.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழா நடத்தப்பட்டது. விழாவில் மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சுதந்திர தின விழாவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கோட்டை பகுதியில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.