‘4 மணிநேரத்திற்குள் தற்காலிக தரைப்பாலம்!’ : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

0
97

‘4 மணிநேரத்திற்குள் தற்காலிக தரைப்பாலம்!’ : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முழுமையான அளவு இயல்பு நிலை திரும்பிய நிலையில், இதர மாவட்டங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப, தமிழ்நாடு அரசால் பல்வேறு துரித நடவடிக்கைகள் முன்னெடிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தருமபுரி மாவட்டத்திலும் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து தருமபுரி மாவட்டம் சென்று கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “ஃபெஞ்சல் புயலுக்குப் பின் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழை காரணமாக, நல்லம்பள்ளி ஒன்றியம், தின்னஹள்ளி ஊராட்சி வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

சம்பந்தப்பட்ட இடத்தில் இன்று மாலை ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, அங்குள்ள கிராம மக்கள், மலைவாழ் பழங்குடியின மக்கள் என சுமார் 2 ஆயிரம் பேர், தாங்கள் இந்தத் தரைப்பாலத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், அதனை உடனே சீரமைத்துத் தருமாறும் நம்மிடம் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்துக்கு மாற்றாக தற்காலிக தரைப்பாலம் ஒன்றினை உடனடியாக அமைத்துத் தருமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டோம்.

அதன்படி, போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்குள், தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் புதிய தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன் கருதி, உடனுக்குடன் இதனைச் சாத்தியப்படுத்திய மாவட்ட நிர்வாகத்துக்கும், துறை சார்ந்த அதிகாரிகள் – அலுவலர்கள் – பணியாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்றென்றும் களத்தில் முன்னின்று மக்கள் துயர் துடைக்கும்” என பதிவிட்டுள்ளார்.

https://x.com/Udhaystalin/status/1863636630449557571