16 தொழில் நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீடு

0
421

16 தொழில் நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீடு

சென்னை, ஜூலை 23–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (23–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 16 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 5,137 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

இத்திட்டங்களின் மூலம், சுமார் 6 ஆயிரத்து 555 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும் முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

தமிழகம் முதலிடம்

மேலும், புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கான அமைவுகள், அனுமதிகளை உடனுக்குடன் வழங்க ஒற்றைச் சாளர முறை, முதலமைச்சரின் தலைமையிலான உயர்நிலைக் குழு என பல வழிமுறைகள் ஏற்கனவே முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

மும்பையைச் சேர்ந்த, ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’ என்ற நிறுவனம், கோவிட்–19 காலத்திலும், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், அகில இந்திய அளவில் அதிகமான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மாநிலத்தினை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தினைப் பிடித்துள்ளது என்று தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

27.5.2020 அன்று, தொழில்துறை சார்பில், ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 தொழில் நிறுவனங்களுடன் 15,128 கோடி ரூபாய் முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இத்திட்டங்களின் மூலம் சுமார் 47,150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அதன்தொடர்ச்சியாக, முதலமைச்சர் முன்னிலையில் 20.7.2020 அன்று 8 தொழில் நிறுவனங்களுடன் 10,399 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 13,507 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

16 புதிய திட்டங்கள் எது?

இன்றையதினம், 16 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. இத்திட்டங்கள் மூலம், 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,555 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தற்போது நிலவிவரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 16 திட்டங்களில், 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இத்திட்டங்களின் விவரங்கள் பின் வருமாறு:–

* செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், 2300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின், தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் –- வடகால் தொழிற்பூங்காவில், சூப்பர் ஆட்டோ போர்ஜி நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், போர்ஜட் ஸ்டீல் மற்றும் அலுமினியம் பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் – வடகால் தொழிற்பூங்காவில் உள்ள, ஏர்புளோ எகிப்மெண்ட்ஸ் நிறுவனம், 320 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஏடிசி டயர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்டியான் நிறுவனம், மோட்டார் வாகன மின் உதிரி பாகங்கள் உற்பத்தி திறனை அதிகரித்திட, 100 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* திண்டுக்கல் மாவட்டத்தில், டாப் அனில் மார்கெட்டிங் நிறுவனம், 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சேமியா உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், 750 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிங்கப்பூரை சேர்ந்த பிரின்சிடான் நிறுவனத்தின், தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

லித்தியம் பேட்டரி

* பிபிஎல் – எப்டி.ஏ. எனர்ஜிஸ் நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்னனு வாகனத்திற்கான லித்தியம் ஐயன் பேட்டரி உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்நிறுவனம் காஞ்சிபுரம் அல்லது செய்யார் பகுதியில் நிலம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

* 150 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 2 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஸ்ரீவாரு மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மின்சார பைக்குகள் (இ–பைக்) உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தின்போது, வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக, ‘‘யாதும் ஊரே” திட்டத்தினை அமெரிக்காவில் துவங்கி வைத்தார். அந்த திட்டத்தின் கீழ், அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தொழில் முனைவோர் சங்கத்தின் மூலமாக, கீழ்க்கண்ட 7 தொழில் நுட்ப திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

அமெரிக்க நிறுவனங்கள்

* அமெரிக்காவைச் சேர்ந்த கிளவுட் எனபிளர்ஸ் நிறுவனம், 35 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தனது ‘அட்டானமஸ் அண்ட் கன்டினியூஸ் கவர்னன்ஸ் பார் தி என்டர்பிரைஸ் கிளவுட்’ திட்டத்தினை, சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* அமெரிக்காவைச் சேர்ந்த டயர் 1 நெட்வொர்க் சொலூசன்ஸ் இன்ங். நிறுவனம், 25 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தனது ‘செயற்கை நுண்ணறிவு பவர்டு புட் மற்றும் அக்ரி சப்ளை செயின்’ திட்டத்தினை, சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்வைர்பே நிறுவனம், 23 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தனது டிஜிட்டல் பேமண்ட்ஸ் திட்டத்தினை, சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* அமெரிக்காவைச் சேர்ந்த பிளித்தி நிறுவனம், 22 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தனது டிஜிட்டல் ஹெல்த் திட்டத்தினை, சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* அமெரிக்காவைச் சேர்ந்த பிட்வைஸ் அகாடமி நிறுவனம், 21 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தனது இ–லேர்னிங் திட்டத்தினை, கோயம்புத்தூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* அமெரிக்காவைச் சேர்ந்த, ரேடியஸ் டிஜிட்டல் (ஹார்மனி செயற்கை நுண்ணறிவு) நிறுவனம், 21 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தனது பின்டெக் மற்றும் பிட்னஸ் அப்ளிகேஷன்ஸ் திட்டத்தினை, சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

* அமெரிக்காவைச் சேர்ந்த கன்டினுபி நிறுவனம், 20 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 35 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தனது சாஸ் பேஸ்டு என்டர்பிரைசஸ் ரிஸ்க் ஆட்டோமெஷன் திட்டத்தினை, சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

என மொத்தம், 16 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,555 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

புதிய இணையதளம்

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் www.investingintamilnadu.com என்ற புதிய இணையதளத்தினை துவக்கி வைத்தார். முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பினை முற்றிலும் பூர்த்தி செய்திடும் வகையில், துறைசார் கவனம், மண்டல தொலைதொடர் திட்டம், ஏற்றுமதி மேம்பாடு போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கி, இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நீரஜ் மித்தல் மற்றும் செயல் இயக்குனர் எஸ்.அனீஷ் சேகர், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.