வேலைக்காக தொழிலாளர்கள் புலம்பெயர்வது குறைவு.. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை!
உள்நாட்டில் வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் போக்கு கடந்த 12 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. வேலைக்காக இடம்பெயர்ந்தவர்கள் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக தமிழகத்தின் விழுப்புரம் உள்ளதாகவும் மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி 2011ஆம் ஆண்டில் சுமார் 45 கோடியே 57 புலம்பெயர் தொழிலாளர்கள இருந்த நிலையில் 2023இல் இது 11.78% குறைந்து 40 கோடியே 20 லட்சமாக இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி காரணமாக மாநிலத்துக்குள்ளேயே வேலைவாய்ப்புகள் அதிகரித்ததே இதற்கு காரணம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் கல்வி, மருத்துவ வசதிகள், கட்டமைப்பு வசதிகள் பெருகியதும் புலம் பெயர்வது குறைந்ததற்கு ஒரு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.
ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளில் டிக்கெட் விற்பனை, மொபைல் போன் பயன்பாட்டிடம் மாறுவது, மாவட்டவாரியான வங்கிக் கணக்குகள் போன்ற பல்வேறு வழிகளில் புலம் பெயர் தொழிலாளர் எண்ணிக்கை குறித்த விவரங்களை சேகரித்ததாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை அதிகம் கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்சாத், சித்தூர், மேற்கு பர்த்மான், ஆக்ரா, குண்டூர், சஹார்சா ஆகிய ஊர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை அதிகம் அனுப்பும் ஊர்களாக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.