‘வெற்றிகள் தொடரட்டும்’ : கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கும் நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உயரிய விருதான கேல் ரத்னா ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், உலக செஸ் சாம்பியனான தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ்-க்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத், பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விளையாட்டில் சிறந்த செயல்திறனுக்கான மதிப்புமிக்க அர்ஜுனா விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ, மோனிஷா உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்கள் ஸ்வப்னில் சுரேஷ் குசலே, சரப்ஜோத் சிங், நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ்,ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ், அர்ஜூனா விருது பெற்றுள்ள துளசிமதி, மனிஷா, நித்யஸ்ரீ ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ், அர்ஜூனா விருது பெற்றுள்ள துளசிமதி, மனிஷா, நித்யஸ்ரீ ஆகியோருக்கு என் வாழ்த்துகள்! வெற்றிகள் தொடரட்டும்!தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.