வாஜ்பாய் 100-வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாஜ்பாயின் படத்தை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே திறந்து வைத்தார். உடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாஜக பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், நடிகர் சரத்குமார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி : துணிவு மிக்க மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சொற்பொழிவாளர், சிறந்த கவிஞர் மற்றும் அரசியல் ஆளுமையாக விளங்கியவர். தேசப்பாதுகாப்பை வலுப்படுத்துதல், அணுசக்தி திறன்களை மேம்படுத்துதல் மற்றும் மூலோபாய ராஜீய உத்திகளாக வடிவமைக்க வழங்கிய, மாற்றத்தை ஏற்படுத்திய பங்களிப்புகள் இந்தியாவின் உலகளாவிய நிலைக்கு மறுவடிவத்தை கொடுத்தன. நல்லாட்சியின் உண்மையான சாம்பியனான அவரது மரபு, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான மற்றும் சுயசார்பு பாரதத்தைக் கட்டியெழுப்ப நம்மைத் தொடர்ந்து ஊக்குவித்து வழிகாட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூறாவது பிறந்தநாளில் தமிழகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், கலைஞர் கருணாநிதியுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம். வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான வாஜ்பாய், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர். பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்கட்சித் தலைவர் எனப் பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர். நமது பாரதத்தை அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர். தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாது.
சரத்குமார்: தொலைநோக்கு பார்வையுடன், இந்திய தேசம் வளர்ச்சி காண அயராது உழைத்த முன்னோடி, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 100-வது பிறந்தநாளில் போற்றி வணங்குவோம்.
சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று , வாஜ்பாய் உருவப்படத்தைத் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.