மரபணு மாற்ற நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சென்னை சிறுவனுக்கு கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
கோவிட் தொற்று நோய் பரவலுக்கு மத்தியிலும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவர்கள் குழு
சென்னை, ஆக. 20- ஒரு வகையான அமிலக் குறைபாட்டால் கல்லீரல் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு கோவிட் தொற்று நோய் பரவலுக்கு இடையிலும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை டாக்டர்கள் குழு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் இது போன்ற நோயால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இது ஒன்று இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை பருவத்தில் கல்லீரலைப் பாதிக்கும் அரிய மரபணு கல்லீரல் நோய்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் இது குழந்தை பருவத்திலேயே கல்லீரல் செயலிழப்புக்கும் வழிவகுக்கிறது. இந்த நோய் மரபணு பிறழ்வால் ஏற்படுகிறது. இது போன்ற சிக்கலான நோய் காரணமாக அந்த சிறுவனை காப்பாற்ற அவனின் தாய் தனது கல்லீரலை தானம் செய்ய முன் வந்தார்.
இந்த நிலையில், கோவிட் – 19 தொற்றுக்கு மத்தியிலும் டாக்டர்கள் ஜாய் வர்கீஸ், ரஜனிகாந்த் பச்சா, செல்வகுமார் மல்லீஸ்வரன் மற்றும் பெருமாள் கண்ணன் தலைமையிலான 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை 8 மணி நேரம் வெற்றிகரமாக மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளான்.
டில்லி கணேஷ் என்னும் சிறுவனுக்கு 2 வயதாக இருக்கும்போதே மஞ்சள் காமாலை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து அவனுக்கு சென்னை, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவனுக்கு மருந்துகள் வழங்கப்பட்ட போதிலும், அவன் தொடர்ந்து மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டான். அது காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அவன் மிகவும் ஆபத்தான நிலையில் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு கால் மற்றும் அடி வயிறு வீங்கியிருந்த நிலையில், அது கல்லீரல் நோய் தொடர்பான அறிகுறி என்பது டாக்டர்கள் குழுவால் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த 5 நாட்களுக்கு பின்னர் அவன் இயல்பு நிலைக்கு திரும்பி எப்போதும்போல சாதாரண உணவை எடுக்கத் தொடங்கினான். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாளில் இருந்து 14வது நாள் அவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
இது குறித்து கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாய் வர்கீஸ் கூறுகையில், அந்த சிறுவன் சிகிச்சைக்காக எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவனது அடி வயிறு வீங்கி இருந்தது. சுமார் 4.5 லிட்டர் திரவம் அவனது அடி வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டு, அந்த திரவம் பரிசோதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது மிகவும் சிக்கலான நிலையாகும். இது உயிர் வாழ்வதற்கும் இறப்புக்கும் இடையிலான குறுகிய கால இடைவெளியாகும். கோவிட் – 19 தொற்று பரவலுக்கு மத்தியிலும், இந்த நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு எங்கள் மருத்துவமனையின் நிபுணர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிச்சை குறித்து கல்லீரல் மாற்று சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ரஜனிகாந்த் பச்சா கூறுகையில், இந்தியாவில் இந்த வகை வளர்சிதை மாற்ற பிரச்சினைக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது அரிதான ஒன்றாகும். அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த சிறுவன் மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக இருக்க முடியும். அவன் உயிரை காப்பாற்ற அவனது தாய் அவனுக்கு உதவி உள்ளார். இந்த அறுவை சிகிச்சையை 10 பேர் கொண்ட எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழு 8 மணி நேரம் மேற்கொண்டது என்று தெரிவித்தார்.