போர்ட் லூயிஸ் பயணத்தை நிறைவு செய்தது ஐஎன்எஸ் இம்பால் கப்பல்

0
144

போர்ட் லூயிஸ் பயணத்தை நிறைவு செய்தது ஐஎன்எஸ் இம்பால் கப்பல்

புதுதில்லி, ஐஎன்எஸ் இம்பால் கப்பல் தனது துறைமுகப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (மார்ச் 14, 2025) போர்ட் லூயிஸில் இருந்து புறப்பட்டது. 57-வது மொரீஷியஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்க மொரீஷியஸ் சென்ற இந்தக் கப்பல், இந்திய கடற்படை பேண்ட், 2 எம்எச் 60 ஆர் ஹெலிகாப்டர்களுடன் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. இந்த கண்கவர் அணிவகுப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

துறைமுகப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக கப்பல் தொழில்முறை தொடர்புகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுகள், மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் ஆகியவையும் நடத்தப்பட்டது.

மொரீஷியஸ் தேசிய கடலோர காவல்படை (என்.சி.ஜி) பணியாளர்களுக்கு துறைமுகக் கண்காணிப்பு, கடல் கண்காணிப்பு, கப்பல் ஹெலிகாப்டர் நடவடிக்கைகள், தீயணைப்பு சேதக் கட்டுப்பாடு ஆகியவற்றின் நடைமுறை அம்சங்கள் குறித்து பயிற்சிகள் நடத்தப்பட்டன. கயாசிங் ஆசிரமத்தில் முதியோருக்கான மருத்துவ முகாமும் கப்பல் ஊழியர்களால் நடத்தப்பட்டது.

மொரீஷியஸ் தேசிய தினத்தை முன்னிட்டு மார்ச் 12 அன்று இந்த கப்பல் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிப்பட்டது. 1,300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனைக் கண்டனர்.

கப்பலின் குழுவினர் போர்ட் லூயிஸில் உள்ள மொரீஷியஸ் காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட அந்நாட்டின் முக்கியப் பாதுகாப்பு நிறுவனங்களைப் பார்வையிட்டனர்.

கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் கமல் கே சவுத்ரி, மொரீஷியஸ் அரசுப் பிரதிநிதிகள், மொரீஷியஸ் காவல் படையின் (எம்.பி.எஃப்) முக்கிய பிரமுகர்கள், அந்நாட்டின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரைச் சந்தித்தார்.

ஐஎன்எஸ் இம்பால் கப்பலின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அத்துடன் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய கூட்டுப் பங்களிப்பு நாடு என்ற இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.