‘நெஞ்சில் குடியிருப்பவன் எப்போ வேணாலும் காலி பண்ணலாம்’ – விஜயை விமர்சித்த திண்டுக்கல் லியோனி!
தவெக தலைவர் விஜய், தனது உரையில் நெஞ்சில் குடியிருக்கும் என கூறுவதை விமர்சித்துள்ள திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, “நெஞ்சில் குடியிருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலி செய்துவிடுவார்கள்” எனக் கூறியுள்ளார்.
நெல்லை பேட்டை பகுதி திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாடநூல் நிறுவன தலைவரும் திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தவெக தலைவர் விஜயை விமர்சித்தார்.
லியோனி தனது பேச்சில், “நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் இரண்டு ஆண்டுகளில் முதல்வராவேன் என பேசுகிறார்கள். நெஞ்சில் குடியிருக்கும் என பேசுகிறார்கள். குடியிருப்பவன் எப்பவேனாலும் காலி செய்துவிடுவார்கள். பணம் கொடுத்தால் ஓடிவிடுவார்கள். அவர் தொடங்கும் வார்த்தையிலேயே தப்பு இருக்கிறது.
நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் திமுகவை கை நீட்டி பேசும் காலமாகிவிட்டது. அவர்கள் பேசுவது விளம்பரத்திற்கும் சினிமாவுக்கும் வேண்டுமானால் நல்லாயிருக்கும். பல ஆண்டுகாலம் பல போராட்டங்கள் மூலம் கட்டப்பட்ட இரும்பு கோட்டையாக திமுக இருக்கிறது. திமுகவிற்கு அடுத்தகட்ட தலைவராக உதயநிதி ஸ்டாலின் தயாராகிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் பல படிகளை தாண்டி பல போராட்டங்களை சந்தித்து கைதாகி ரிலீசாகி வந்தவர்.
படித்து முடித்து வெளியே வந்தவுடன் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கவில்லை. 2019 தேர்தலில் 234 தொகுதியிலும் உதயநிதி பரப்புரை மேற்கொண்டவர். படிப்படியாக பதவிகளை பெற்றவர். உலகமே விளையாட்டு துறையை திரும்பி பார்க்க வைத்து விளையாட்டு துறை அமைச்சராக மிகப்பெரிய சாதனையை செய்தார். அடுக்கடுக்காக தனது பணியை சிறப்பாக செய்ததால் தான் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது.