‘நான் முதலமைச்சராக இருக்கும் வரை…’ : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக சொன்னது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று மறைந்த முரசொலி செல்வம், ரத்தன் டாடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், மதுரை நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, தி.மு.க அரசு மீது பொய்யான கருத்துக்களை கூறினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே பதிலடி கொடுத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இங்கு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உங்கள் உறுப்பினர்கள் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பெருமை பேசுகிறீர்களே, என்ன செய்தீர்கள் என்ற ஒரு கேள்வியைக் கேட்டார்கள். எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.
நான்கூட, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார் என்று பொறுமையாக இருந்தேன். ஆனால், இப்போது நான் விவரத்தைக் கேட்டு ஆதாரத்தோடு சொல்கிறேன். நாடாளுமன்றத்திலே எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக இதை எதிர்த்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; அங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில், அந்த மாவட்டத்தில் அமைச்சராக இருக்கக்கூடிய மூர்த்தி அவர்கள் நேரடியாகச் சென்று, அந்தப் போராட்டத்தின் தன்மையைப் பற்றி அறிந்துகொண்டு, “போராட்டத்தை நிறுத்துங்கள்; எங்கள் அரசு உங்களுக்கு ஆதரவாக இருக்கும்” என்று சொன்னார்.
அதோடு, இது தொடர்பாக முதலமைச்சர் அவர்களும் இந்தியப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்று சொல்லி, சட்டமன்றத்தில் இதுகுறித்து தீர்மானம் கொண்டு வரப்போகிறோம் என்பதையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடத்தில் சொல்லி, அதற்குப் பிறகுதான் இந்தத் தீர்மானம் இங்கு வந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வளவு வேகமாகப் பேசிவிடுகின்ற காரணத்தால் ஏதோ சாதித்துவிட்டோம் என்று நீங்கள் நினைத்துவிட வேண்டாம். நிச்சயமாகச் சொல்கிறேன்; உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள் அவ்வப்போது தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறோம்; எங்களுடைய கண்டனக் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல; போராட்டக்களத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடத்தில்கூட நம்முடைய அமைச்சர் அவர்கள் பேசுகின்றபோது, சட்டமன்றம் கூடுகின்றபோது இதுபோன்ற ஒரு தீர்மானத்தை அவையில் கொண்டு வருவோம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதோடு, ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதுகின்றபோது, அதுதொடர்பான செய்தி வெளியீடுகளில் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு, முதலமைச்சர் அவர்கள் இதுசம்பந்தமாக கடிதம் எழுதியிருக்கிறார் என்கிற செய்தியெல்லாம் விவரமாக வந்திருக்கிறது. ஆனால், நீங்கள் இதுகுறித்து தெரியவில்லை, தெரியவில்லை என்று பேசினால், என்ன அர்த்தம்?
நாடாளுமன்றம் கூடி, கூடி கலைந்துகொண்டிருக்கிறதே தவிர, அங்கே தொடர்ந்து அவை நடவடிக்கைகள் நடந்ததாக நமக்கு இதுவரையில் செய்தி வரவில்லை. ஆனால், கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி, அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம். நாடாளுமன்றம் கூடுகிறது; ஆனால், அவையை ஒத்திவைக்கிற சூழ்நிலைதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே தவிர, தொடர்ந்து அவை நடக்கவில்லை. இதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பத்திரிகையில் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.