திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா! – கண்ணாடி கூண்டு பாலப்பணி 95% நிறைவு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

0
69

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா! – கண்ணாடி கூண்டு பாலப்பணி 95% நிறைவு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பாலப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு ரூ.37 கோடி செலவில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல அமைக்கப்பட்டு வரும் நிலையில், பாலப் பணிகளின் நிலை குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டதோடு அதிகாரிகளிடம் பணிகள் தொடர்பாகவும் கேட்டிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “முக்கூடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையில் 75 மீட்டரில் பாலம் அமைக்க சாகர் மாலா திட்டத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுப்பணித்துறை மூலம் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் உறுதிதன்மையுடன் உள்ளதோடு, 185 கிமீ வேகத்தில் புயல் அடித்தாலும், 7 மீட்டர் வரை கடல் அலை உயர்ந்தாலும் பாலத்திற்கு எந்த ஒரு சேதாரமும் ஏற்படாத வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி மூலம் பாலம் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு பாலப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஐஐடி பேராசிரியரும் தொடர்ச்சியாக பாலப்பணிகளை கண்காணித்து வருகின்றனர். பாலப்பணிகள் முழுமையாக முடிவு பெற்ற உறுதி தன்மை சான்றிதழ் பெற்ற பின்பே திறப்பு விழா நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மறைந்த முதலமைச்சர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், 25வது வெள்ளி விழா தமிழ்நாடு முதலமைச்சரால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. காந்தி மண்டபம் புனரமைப்பு பணி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 அரசு கட்டிடங்கள் புனரமைத்து மின்விளக்குகள் அமைக்கும் பணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி, நேசமணி நினைவு மண்டபம், தேசிய விநாயகம் பிள்ளை மணிமண்டபம்,

பொதுப்பணி துறையின் புதிய பழைய மாளிகை புனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விழாவிற்கு வரும் பார்வையாளர், அறிஞர் பெருமக்கள் பங்கேற்கும் வகையில் மேடை அமைக்க இடம் தேர்வு, வெள்ளி விழா ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டதாக கூறிய அவர், வெள்ளி விழா கொண்டாடும் நேரத்தில் கண்ணாடி பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தலைமை பொறியாளர், துறை அலுவலர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.

கன்னியாகுமரி கண்ணாடி பாலப்பணிகள் 95% முடிவடைந்துள்ளது. ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் பாலத்தில் நடக்கும் அளவிற்கு பாலம் உறுதியுடம் வடிவமைக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.