ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பாப்கார்ன் மீதான வரி தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களில் இருந்து காக்கும் ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
பாப்கார்ன் மீதான வரி தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்த அவர், திரையரங்குகளில் விற்கப்படும் பேக் செய்யப்படாமல் மற்றும் லேபிள் இல்லாமல் விற்கப்படும் பாப்கார்னுக்கு 5 சதவீத வரியும், உப்பு மற்றும் பெப்பர் சேர்த்து பேக் செய்யப்படும் லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவீத வரியும், கேரமல் வகை பாப்கார்னுக்கு 18 சதவீத வரியும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பழைய கார்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்வு:
ஏசிசி பிளாக் எனப்படும் ஆட்டோக்ளேவ் ஏரேட்டட் கான்கிரீட் கற்கள், 50 விழுக்காடுக்கு அதிகமான சாம்பலுடன் தயாரிக்கப்பட்டிருந்தால், அதற்கு 18 சதவீதத்துக்குப் பதிலாக 12 சதவீத வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பழைய கார்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதத்துக்கு உயர்த்தவும், செறிவூட்டப்பட்ட அரிசிக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு:
விவசாயிகள் பச்சை மிளகு, காய்ந்த மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும்போது எந்தவிதமான ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படாது. ஆனால், அதை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும்போது அவற்றுக்கு வரி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப்பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விமானங்களுக்கான எரிபொருள் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மருத்துவ மற்றும் ஆயுள் கப்பீடுகளுக்கான ஜிஎஸ்டியை குறைப்பது, உணவு டெலிவரி சேவை மீது வரி விதிப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை