ஜனவரி இறுதியில் தொடக்கம்.. தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்?
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்தகட்டமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். அந்த வகையில் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார்.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் கட்சி பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலை அறிமுகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. அப்போது பேசிய அவர், “நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அவருடைய அறிவிப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். பிறர் அவருடைய கருத்தை விமர்சித்திருந்தனர். எனினும், இந்த அதிகாரப் பகிர்வு கருத்து தற்போதுவரை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற விழாவின்போதும் இதுகுறித்த கருத்து பரவலான விவாதங்களைப் பெற்றது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர் கட்சிரீதியாக அனைத்துக்கும் அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். தேசத் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நாட்டில் நடைபெறும் அனைத்துச் சம்பவங்களுக்கு எதிராகவும் அவர் அறிக்கைகள் விட்டு வருகிறார்.
எனினும், தமிழ்நாடு முழுவதும் சென்று அவர் மக்களைச் சந்திக்காமல் இருப்பதால் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருந்தாலும்கூட, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டன. அதேபோல தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளைத் தேர்தலுக்குத் தயார்படுத்தவும், மக்களைச் சந்திக்கவும் ஜனவரி மாத இறுதியில் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் என அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.