சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு CT சிமுலேட்டர்… ரூ.4 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது சேலம் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான மூன்றாம் நிலை சிகிச்சை மையமாகும். இது சேலம் மாவட்டத்தில் உள்ள மக்களின் அடிப்படை மற்றும் மேம்பட்ட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை தேவைகளுக்கு மிகவும் உதவுகிறது. இம்மருத்துவமனையில் 2535 படுக்கைகள் உள்ளன. இம்மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 1600 முதல் 1700 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். இம்மருத்துவமனையானது ஏழை நோயாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சை உட்பட முக்கிய சிறப்பு சேவைகளை வழங்குகிறது.
● ஆண்டிற்கு சுமார் 1800 புற்றுநோய் நோயாளிகள் புதிதாக பதியப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
● நாள்தோறும் 180 புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக புறநோயாளிகளாக வருகின்றனர். ஒரு மாதத்திற்கு 500 நோயாளிகள் பகல் நேர புற்றுநோய் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்கின்றனர்.
● அதிநவீன கோபால்ட் புற்றுநோய் சிகிச்சை கருவி பயன்பாட்டில் உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டெலிகோபால்ட் உபகரணம் மூலமாக மாதமொன்றிற்கு சுமார் 50 பேருக்கு கதிரியக்க சிகிச்சை வழங்கி வருகிறது.
● கூடுதலாக இம்மருத்துவமனைக்கு லினாக் (ரூ18 கோடி) மற்றும் HDR பிராகியதெரபி (ரூ18 கோடி) உபகரணம் ஒதுக்கப்பட்டு அதனை நிறுவும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பிரிவினை மேம்படுத்தும் விதமாக ரூபாய் நான்கு கோடி மதிப்பீட்டில் சிடி சிமுலேட்டர் உபகரணம் வழங்கப்படும் என நமது சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டார். அதனடிப்படையில் தமிழ்நாடு அரசால் இன்று ரூ.4 கோடி மதிப்பீட்டில் சிடி சிமுலேட்டர் உபகரணம் வாங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சிடி சிமுலேட்டர் உபகரணம் புற்றுநோய் பாதித்த பகுதிகளை துல்லியமாக கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்க பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை வழங்கலாம். தனியார் மருத்துவமனையில் சுமார் ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 2.5 லட்சம் வரை செலுத்தி செய்யப்படும் கதிரியக்க சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக கிடைக்கும். இதனால் சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
இந்த முயற்சி தமிழ்நாட்டு மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவையை உறுதி செய்வதற்கான தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.