காஞ்சிபுரத்தில் முதல்வர் திறந்து வைத்த ராஜாஜி மார்க்கெட்: 6 மாதங்களுக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்தது
காஞ்சிபுரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த ராஜாஜி மார்க்கெட் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. செயல்பாட்டுக்கு வந்த இரண்டாம் நாளே கடையைவிட்டு வெளியே பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து பல கடை உரிமையாளர்கள் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த 1933-ம் ஆண்டு ரயில்வே சாலையில் கட்டப்பட்டது ராஜாஜி சந்தை. மொத்தம் 90 ஆண்டுகள் இந்த சந்தை பயன்பாட்டில் இருந்தது. அதிலிருந்த பல்வேறு கடிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தன. இதனால் அந்தக் கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதற்கான பணிகள் 2022-ம் ஆண்டு மே 20-ம் தேதி தொடங்கியது. மொத்தம் ரூ.6 கோடியே 81 லட்சம் மதிப்பில் 242 கடைகள் இந்தச் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுப் புறத்தில் 66 கடைகளும், மத்திய பகுதியில் 182 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இந்தச் சந்தையைத் திறந்து வைத்தார். இந்த மார்கெட் திறப்பு விழா நடந்த அன்று மட்டுமே செயல்பட்டது. மறுநாளே இந்த மார்க்கெட் பூட்டப்பட்டது.
இதுகுறித்து கேட்டபோது சில வேலைகள் முடிக்கப்படாமல் இருந்ததும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை வியாபாரிகள் செலுத்துவதில் இழுபறி நீடித்ததும் காரணம் என்று சொல்லப்பட்டது. 6 மாத இழுபறிக்கும் பின்னரும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்தத் தொகை அந்த மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று ராஜாஜி மார்கெட் செயல்பாட்டுக்கு வந்தது.
செயல்பாட்டுக்கு வந்த இரண்டாம் நாளே இன்று அங்கு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. வியாபாரிகள் பலர் பொதுமக்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே பொதுமக்கள் நடந்து செல்லும் இடத்தில் பொருட்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்தனர். இதனை தற்போதே மாநகராட்சி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பழையபடி பொதுமக்கள் நடந்து செல்வதற்கே வழியில்லாத வகையில் மார்கெட் ஆக்கிரமிப்பு செய்யப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.