கட்டணமின்றி நாட்டுடைமையாக்கப்பட்ட கலைஞரின் நூல்கள்… அரசாணையை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன் !

0
115

கட்டணமின்றி நாட்டுடைமையாக்கப்பட்ட கலைஞரின் நூல்கள்… அரசாணையை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன் !

சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவருமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், முத்தாரம் உள்ளிட்ட அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படும்‌ என்று முதலமைச்சர் ஆகஸ்ட் 22ம்தேதியன்று ஆணையிட்டார்.

அதற்கிணங்க சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி முன்னிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அவர்களிடம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்து நூல்களும் நூல்ரிமைத்தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி பருவத்தில் எழுத தொடங்கி மாணவர் நேசன் பத்திரிகை தொடங்கி முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதியவர் கலைஞர். அதனைத் தண்டி திரையுலகிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராகவும் இருந்த மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்.

இதுவரை 179 படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. அதற்கான நூல் உரிமைத் தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூலை நாட்டுடைமை ஆக்குவதற்கு தொகை வேண்டாம் என்று அவரின் குடும்பத்தினர் சொல்லி கட்டணமின்றி நூல் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. இதற்கான சூழ்நிலை உருவாக்கித் தந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பிலும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பிலும் எழுத்தாளர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.