‘ஒன்றிய அரசு நிதி தரவில்லை என்றால் இந்த முறையும் சமாளிப்போம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வருகை தந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறை அதிகாரிகளுடன் மழை வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை, வெள்ள நிவாரண பணிகளில் களபணியற்றி வரும் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சிவசங்கர், செந்தில் பாலாஜி, சி.வி.கணேசன், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் காணொளி காட்சி வாயிலாக உள்ளிட்டோரும் காணொளி காட்சியில் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கேட்டறிந்து மேலும் அங்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆய்வுக்குப் பின்னர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசியது வருமாறு :
“சென்னையில் கன மழை பெய்தது தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை. வடசென்னை பகுதிகளில் ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
1686 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கிறது. 21 சுரங்கப் பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கப் பாதையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சென்னையில் 32 முகாம்கள் அமைக்கப்பட்டு 1018 நபர்கள் தங்க வைக்கப்பட்டு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. 9,10,000 உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 386 அம்மா உணவகத்தில் 1 லட்சத்திற்கும் மேலாக உணவு வழங்கப்பட்டுள்ளது. எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் இருந்து வருகிறது. கொளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை என மக்களே தெரிவித்தார்கள்.
வரலாறு காணாத அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி , சிவசங்கர், எம் ஆர் கே பன்னீர்செல்வம் களத்தில் உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைந்து இருக்கிறார்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட 12 குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 26 முகாம்களில் 1373 நபர்கள் தங்கள் வைக்கப்பட்டுள்ளனர்.மழை வெள்ள பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்கிடவும் , பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள குழுவை அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு அதற்கு பிறகு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம். புயல் சேதங்கள் குறித்து ஒன்றிய அரசிடம் நிதி கோருவது குறித்து நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த காலங்களில் ஒன்றிய அரசிடமிருந்து கோரப்பட்ட பேரிடர் நிதி முழு முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையில் இந்த முறையும் கோரிக்கை வைத்தால் நிதி கிடைக்குமா? என்பது குறித்த கேள்விக்கு, “நல்லதே நினையுங்கள், நடக்கும். கடந்த முறை ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்டோம் முழுமையாக தரவில்லை, சமாளித்தோம். இந்த முறையும் கேட்கிறோம் தரவில்லை என்றால் சமாளிப்போம்” என தெரிவித்தார்.